22/8/2020 அன்று மிக எளிமையான முறையில் ‘விநாயகர் சதுர்த்தி’ விரதத்தை இப்படியும் மேற்கொள்ளலாம்!

13 Views
Editor: 0

ஆவணி சதுர்த்தி திதியில் வரும் விநாயகர் சதுர்த்தி உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெரும் விசேஷமாக வருடா வருடம் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது..

22/8/2020 அன்று மிக எளிமையான முறையில் ‘விநாயகர் சதுர்த்தி’ விரதத்தை இப்படியும் மேற்கொள்ளலாம்!

ஆவணி சதுர்த்தி திதியில் வரும் விநாயகர் சதுர்த்தி உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெரும் விசேஷமாக வருடா வருடம் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது முழுமுதற் கடவுளான விநாயகர் என்றே கூறலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுபவர் நம்முடைய பிள்ளையார் தான். அவர் மேல் நாம் கொண்ட அன்புக்கும் பக்திக்கும் எல்லை ஒன்று இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அனைவராலும் விரும்பப்படும் விநாயகரின் தோற்றம் இந்த தினத்தில் தான் நிகழ்ந்தது.

அதனால் இன்றைய நாளில் நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்பது நம்முடைய நம்பிக்கை. விநாயகரை இப்படித் தான் கும்பிட வேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது. நீங்கள் மனதார ஒருமுறை அவரின் பெயரை உச்சரித்தாலே அவர் மனம் நிறைந்து உங்களுடன் வந்து விடுவார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவரை எப்படி எளிமையாக, முறையாக நம் வீட்டிலேயே கொண்டாடுவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சதுர்த்திக்கு முந்தைய நாளே முதலில் வீட்டையும், வீட்டை சுற்றியும் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறை மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்து, சந்தன, குங்குமம் இட்டு கொள்ளுங்கள். பின் விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டில் இருக்கும் அனைவரும் குளித்து முடித்து சுத்தமான உடையை உடுத்திக் கொள்ள வேண்டும். தலைவாசலில் மாக்கோலம் இட வேண்டும். முடிந்தவர்கள் மாவிலை தோரணம் கட்டுவது சிறப்பானது. விநாயகருக்கு இஷ்ட விருட்சமாக இருப்பது அரசமரம். மேலும் அரச மர இலையில் விநாயகரின் ஸ்வரூபம் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே அரச இலையில் தோரணம் கட்டுவது இன்னும் சிறப்பான ஒன்று.

பின்னர் பூஜை அறையில் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு போன்றவற்றிற்கு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகரை அமர வைக்கும் பலகையை மஞ்சள் தடவி மாக்கோலமிட்டு அல்லது ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்பி கொள்ள வேண்டும். விநாயகரை முந்தைய நாளே வாங்கி வைத்திருந்தாலும் சரி அல்லது போய் வாங்கிக் கொண்டு வருவது ஆனாலும் சரி வெறும் கையில் அவரை தூக்கிக் கொண்டு வரக் கூடாது. தட்டு அல்லது பலகை மனை எடுத்துக் கொண்டு போக வேண்டும். மண் பிள்ளையார் மிகவும் நல்லது. பிள்ளையாரை வாங்கிக் கொண்டு வந்து பரப்பி வைத்த பச்சரிசியின் மேல் அமரச் செய்ய வேண்டும்.

பின்னர் அவருக்கு பிள்ளையார் துண்டு உடுத்தி, பூணூல் செய்து சாற்ற வேண்டும். மூன்று இழைகள் கொண்ட வெள்ளை நூலில் சந்தனம் தடவி கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையாருக்கு பொருந்தும்படி இடது பக்க தோளில் பூணுலை சாற்றி வலது பக்க இடுப்பில் மூன்று முடிச்சுகள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் சந்தனம், குங்குமம் இட்டு எருக்கம் மாலை போட்டு, அருகம்புல் வைத்து, மணம் மிக்க மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

porana-kozhukattaiபிள்ளையாருக்கு மிகவும் பிடித்த அப்பம், கொழுக்கட்டை, மோதகம், பச்சரிசி, முறுக்கு, சுண்டல், பால் பாயாசம் இவைகளை நிவேதனமாக படைக்க வேண்டும். உங்களால் முடிந்தால் பழங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையும் வைக்கலாம். ஆவணியில் கம்பும், சோளமும் பசுமையாக விளையக் கூடியவை. அதனால் தான் தொன்றுதொட்டு இவைகள் விநாயகருக்குப் படைக்கப்பட்டு வருகின்றன. எனவே தான் இன்றும் கடைகளில் விநாயகர் சதுர்த்தி அன்று இவைகள் விற்கப்படுகின்றன. தீர்த்தமாக சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து வையுங்கள். தேங்காய், பூ, பழம், வெற்றிலை போன்ற தாம்பூழத்தை வைக்கலாம்.

vinayagar-chathurthi1விநாயகரை பொருத்தவரை நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை படைத்தால் முழுமனதுடன் அவர் ஏற்றுக் கொள்வார். விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம் அல்லது சாதாரணமாக விநாயகரை வழிபட்டால் போதுமானது. பின்னர் தீபம் ஏற்றி விநாயகர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். செண்பக மலர்கள் கிடைத்தால் அர்ச்சனை செய்யுங்கள். பின் தூப, தீபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுத்து முடித்த பின் தண்ணீரால் கற்பூரத்தை சுற்றி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மும்முறை ஊற்ற வேண்டும்.

thoppukaranamபின்னர் விநாயகருக்காக மும்முறை தோப்புக்கரணம் போட்டு, தலையில் மூன்று முறை குட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் எந்த தவறுகள் செய்திருந்தாலும் அவர் அதை மன்னித்து, நமக்கு சௌபாக்கியம் தந்தருள்வார் என்பது நம்பிக்கை. விநாயகர் மூன்று நாள் வரை நம்முடைய வீட்டிலேயே தங்க வைத்து, அவருக்கு பிடித்தமானவற்றை மாலையில் நிவேதனம் வைத்து வழிபடலாம்.

vinayagar-karaisalமூன்றாம் நாள் நீர் நிலைகளில் அல்லது கிணறு, தோட்டம் போன்ற பகுதிகளில் அவரை கரைத்து விடலாம். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுபவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. வருகின்ற சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தியை நீங்களும் உங்கள் குடும்பத்தாருடன் மனமார பக்தியுடன் கொண்டாடி கணபதியின் அருளை முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கோவில்கள்