தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழித்தால் என்ன நடக்கும் தெரியுமா? தூங்கும் பிள்ளைக்கு இதையெல்லாம் செய்யவே கூடாது!
எப்பொழுதும் தூங்கும் குழந்தைக்கு மட்டும் திருஷ்டி கழிக்கக் கூடாது என்பார்கள். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஃபோட்டோ எடுப்பது, குளிப்பாட்டுவது, பொட்டு வைப்பது, அலங்காரம் செய்வது, திருஷ்டி கழிப்பது போன்ற செயல்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி செய்தால் அது எதிர்வினையை உண்டாக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு இதையெல்லாம் செய்தால் அது மிகப் பெரிய பாவமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் என்ன விளைவுகள் நேரும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
குழந்தையை எப்பொழுதும் விழித்து கொண்டிருக்கும் பொழுது தான் குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டியதும் பவுடர், திருஷ்டி பொட்டு வைத்து தூங்க வைக்க வேண்டும். தூங்க வைத்த பின் விரல்களால் திருஷ்டி கழிப்பது, மற்ற பொருட்களையும் கொண்டு திருஷ்டி கழிப்பது மிகவும் தவறான செயலாகும். இதனால் குழந்தையின் ஆயுள் குறையும் என்று சாஸ்திரம் நம்மை எச்சரிக்கிறது.
திருஷ்டி கழிப்பு என்பது குழந்தையின் நன்மைக்காக செய்யப்படும் ஒரு செயலாகும். அதுவே எதிர்வினையாக, கெட்டதை விளைவிக்கக் கூடிய செயலாக மாறி விடக்கூடாது. அதனால் தான் தூங்கும் பொழுது திருஷ்டி சுற்றி போடக்கூடாது என்று கூறுகிறார்கள். குழந்தை சரியாக சாப்பிடாவிட்டாலும், பிரமை பிடித்தது போல் இருந்தாலும், அடிக்கடி அழுதாலும் மற்றவர்களின் கண்பார்வை திருஷ்டி பட்டிருக்கிறது என்பது தான் அர்த்தம். அதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தி சுலபமாக திருஷ்டி கழிக்கலாம்.
நன்றாக ஓடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அமைதியாக இருந்தால் இதுபோல் திருஷ்டி கழியுங்கள். குழந்தையின் முடி, காலடி மண், கடுகு, உப்பு, மிளகாய் இவற்றை வலது கையில் வைத்துக் கொண்டு குழந்தைக்கு மும்முறை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பார்கள். திருஷ்டி பரிகாரங்கள் எவ்வளவோ இருந்தாலும் இது மிகவும் சக்தி வாய்ந்த திருஷ்டி கழிப்பாக உங்கள் குழந்தைக்கு இருக்கும்.
குழந்தை திடீரென கீழே விழுந்து பதட்டத்தில் அழுதால், கீழே விழுந்த இடத்தில் இருக்கும் செங்கல் துண்டு அல்லது மண்ணாங்கட்டி என்று கூறப்படும் மண்ணாலான கல் ஒரு துண்டு எடுத்து தலையை சுற்றி மும்முறை திருஷ்டி கழித்து தூக்கி தூரப் போடுங்கள். பயந்த குழந்தை உடனே நலமாகும்.
சாப்பிடாத குழந்தை நன்றாக சாப்பிடுவதற்கு கிராமப்புறங்களில் இந்த திருஷ்டி கழிப்பு முறையை கையாள்வார்கள். அதாவது பிள்ளையை தாயின் மடியில் அமர வைத்து, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு திருஷ்டி சுத்தி தண்ணீரில் கரைப்பார்கள். உப்பு கரைவது போல் குழந்தை மேல் பட்ட கண் திருஷ்டியும் கரையும் என்பது நம்பிக்கை.
குழந்தை பிரமை பிடித்தது போல் இருக்கும் சமயத்தில் எதுவும் சாப்பிடாது, விளையாடாது, சரியாக தூங்காது இருந்தால் பூந்துடைப்பத்தின் குச்சியை நெருப்பில் எரித்து குழந்தைக்கு திருஷ்டி சுத்தி பிறர் கால்மிதி படாதவாறு போட்டு விடுங்கள். இதனால் கண் திருஷ்டி நீங்கி குழந்தை எப்போதும் போல் விளையாடும்.