பச்சை மிளகாயின் விதையை தின்றுவிட்டால் செரிமானம் ஆகாதா? மென்று தின்பதற்கு சோம்பல் பட்டு நாமே தேடிக்கொண்ட தலைவிதி!
அடேய்! இலந்தைப் பழ கொட்டையை முழுங்கிட்டேன். வயிற்றில் மரம் முளைக்குமா? என்று கேட்ட அப்பாவி 90ஸ் கிட்ஸ் நாங்க. ஏதாவது விதையை விழுங்கிவிட்டால், வயிற்றில் மரம் முளைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த தலைமுறைக்கு, எதை சாப்பிட்டாலும், விதையை ஒதுக்கி வைத்துவிட்டே சாப்பிட வேண்டும் என்றே பழக்கப்படுத்திவிட்டார்கள். பழமாக இருந்தாலும் சரி, காய்கறியாக இருந்தாலும் சரி, முழு விதையை அப்படியே விழுங்கிவிட்டால், செரிக்காது. அப்படியே முழுவதுமாக கழிவில் வெளியேறிவிடும்.
ஒரு சில பழங்களில், பழத்தை விட விதையில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்படி முட்டையை அடை வைத்தால், அது குஞ்சு பொரித்து ஒரு உயிரினம் உருவாகிறதோ. அது போல ஒரு தாவரத்தின் அடுத்த சந்தையை உருவாக்கும் பங்கு விதைகளுக்கு உண்டு. முட்டையை சத்துகாக அணுகுவதை போல, விதைகளையும் எடுத்துக்கொள்ளலாம். திராட்சை விதைகளை நன்றாக மென்று விழுங்கினால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை.
கொய்யா, சீதாப்பழம், தர்பூசணி, திராட்சை பழங்களின் கொட்டைகளை அப்படியே விழுங்குவதால், முழுவதுமாக செரிக்காமல் அப்படியே கழிவில் வெளியேறும். நமக்கு கொட்டை சாப்பிட சோம்பல் வந்ததன் விளைவு, விதையில்லா பழங்கள் மார்கெட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டது. அது உடம்புக்கு நல்லதல்ல. தரமாக இருக்க வேண்டும் என்றால், நம்ம ஊரு நாட்டு பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பச்சை மிளகாய் விதைகளை பொறுத்தவரையில், சட்டி பதத்தில் அரைத்துவிட்டால் சீக்கிரம் செரிமானமாகிவிடும். விதைகளை அப்படியே விழுங்கினால், எந்த சைஸில் விழுங்கினோமோ அப்படியே வெளியே வரும்.
நம்ம உடம்பு டிசைனே அப்படி தாங்க. அரைபட்ட விதை, வயிற்றில் செரித்துவிடும். ஜீரணமாகி கழிவுடன் கலந்துவிடும். அதுவே அரைபடாத முழு விதை செரிக்காது. காரணம் என்னவென்றால், சேதம் அடையாத விதை, கழிவின் வழியாக வெளியே வந்து, மண்ணில் விழுந்தாலும், அது முளைக்கும் தன்மையுடன் இருக்கும். முழு விதையில் உயிர்ப்பு இருப்பதால், நம்முடைய உடம்பே அதனை செரிப்பதில்லை. இயற்கை எவ்வளவு ஆச்சர்யமானது பாருங்க. இன்றைக்கு நாம் பார்க்கின்ற காடுகள் அனைத்தும், இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பறவைகள் இட்ட எச்சத்தால் முளைத்தவையே.