நிலக்கடலை அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தா?
எத்தனை டெக்னாலஜி வந்தாலும், இந்த புரளி பேசுறதும், வதந்தி பரவுவதும் எந்த காலத்திலும் மாறாது போல. முன்னர் வாய் வழியாக பரவிய வதந்தி, இப்போது வாட்ஸ்ஆப் வழியாக பரவுகிறது. வேறுபாடு அவ்வளவு தான். அப்படி சமீபத்தில் நான் பார்த்த ஒரு தகவல், நீங்கெல்லாம் எங்க இருந்துடா வரீங்க.? என்று கேட்கத்தூண்டுகிறது. நிலக்கடலையை அளவுக்கு அதிகமாக, ஒரே நாளில் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்ப்படுத்திவிடுமாம். அதற்கு அடுத்து, "நடிகனின் படத்தை ஷேர் செய்கிறோம். மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட இதனை ஷேர் செய்ய மாட்டோமா?" என்ற ரைட் அப் வேறு.
உண்மையாக பார்த்தோமேயானால், நிலக்கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் என்று கூறுவார்கள். அந்தப் பித்ததை குறைக்க வெல்லம் சாப்பிடச்சொல்லுவார்கள். இப்போதும் கோவில்பட்டியில் கடலை பொட்டலம் வாங்கினால், அதில் வெல்லமும் இருக்கும். இதுவே வட இந்தியாவில் வறுத்த வேர்க்கடலை வாங்கும் போது, அதனுடன் வெல்லத்திற்கு பதில், சிறிய பாறை உப்பு பொடி பொட்டலமும் கொடுப்பார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், கொஞ்சம் வயிறு உப்பசமாக இருக்கும் அதற்காக தான் இந்த முன்னேற்பாடு, மற்றபடி வேர்கடலையில் சத்து இருக்கும் அளவிற்கு, பருப்பில் கூட இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நிலக்கடலை ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து வெல்லம்தான். வெல்லத்தோடு கலந்து சாப்பிட்டால் சீக்கிரம் ஜீரணமாக்கிவிடும். சும்மாவா வெல்லத்தை காய்ச்சி ஊற்றி, அதனோடு பொடியான வேர்க்கடலை சேர்த்து கடலை மிட்டாய் செய்தார்கள். இதே முறையில் செய்யப்பட்ட கமர்கட் என்ற இனிப்பு மிட்டாய் என்றால் எனக்கு வெகு பிரியம்.
வெல்லப்பாகை சற்று அதிகமாக காய்ச்சி, அதில் தோல் நீக்கிய வறுத்த நிலக்கடலை பருப்பை கலந்து, நல்லெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறிய பிறகு, உருண்டையாக உருட்டி வாயில் போட்டால், சும்மா ஜவ்வு மாதிரி நாவில் கரைந்து, வயிற்றை அடையும். நிலக்கடலையில் புரதம், நார், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. அளவோடு சாப்பிட்டால் மிக நல்லது. பணக்கார பருப்புகளான பாதாம், பிஸ்தா, முந்திரியில் உள்ள சத்தை விட நிலக்கடலையில் சத்து அதிகம். இனியும் இப்படி வாட்ஸ்ஆப் வதந்தி வந்தால், அனுப்பியவரை பிளாக் செய்யப்போகிறேன்.