ஆம்பூர் அருகே ஜல்லி போடும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு.
வாணியம்பாடி, அக்.22- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், ஆர்பட்டி பகுதியில் தர்ம சாஸ்தா ஆலயத்தின் சார்பில் கோயிலின் அருகில் செல்லும் கானாற்று நீரோடை பகுதியில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக தடுப்பு சுவர் அமைக்க கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று குடியாத்தம், அடுத்த மீனூர் மலை பகுதியை சார்ந்த காண்ட்ராக்டர் ராஜேஷ்குமார் மூலமாக அதே பகுதியில் இருந்து ஐந்து பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் கான்கிரீட் ஜல்லி போடும் பணிக்காக அழைத்து வரப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பணி முடித்துவிட்டு இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் இயந்திரம் சுற்றிக் கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மீனூர் மலைப் பகுதியைச் சேர்ந்த தேவயானி(58) எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கான்ட்ராக்டர் ராஜேஷ் குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜெல்லி போடும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கூலித் தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துள்ளது.