விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்

71 Views
Editor: 0

விபத்தில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்லடாக் எல்லைக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்..

தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா  (வயது 43). இவர், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ராணுவப் பிரிவு ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதில் ஒரு பெண் குழந்தை, 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையால், லடாக் எல்லையில், இந்தியா, தனது ராணுவ முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அந்த வகையில், புவனேஷ்வரில் இருந்து ராணுவத் தடவாளங்களை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டு லடாக் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு, நேற்று முன்தினம் வாகனம் புறப்பட்டுள்ளது. அதில், அழகு ராஜா ஓட்டுநராகவும் உடன் இரண்டு ராணுவ வீரர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில், ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் சோட்டுப்பால் (Chutupalu - NH-33) என்ற இடத்தில் ராணுவ வாகனம் விபத்திற்குள்ளானது. இதில், அழகுராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் மற்றும் ராம்கர் போலீஸ் உயரதிகாரிகள் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனர். அழகு ராஜாவின் உடல், கோவை விமானநிலையம் கொண்டுவரப்பட்டு, இன்று நள்ளிரவில் அவரது சொந்த ஊரான குச்சனூர் துரைசாமிபுரத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனித்துவருகிறது.

இது தொடர்பாக அழகுராஜாவின் உறவினர்கள் கூறும் போது, “15 வருடமாக அழகுராஜா ராணுவத்தில் இருக்கிறார். விடுமுறைக்கு வந்துவிட்டு, கடந்த மார்ச் மாதம்தான் பணிக்குத் திரும்பினார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது” என்றனர்.

அழகுராஜாவின் உயிரிழப்பு, குச்சனூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.