உயிரிழந்தவரின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றிச்சென்ற காட்சி.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 422 பேருக்கு (உயிரிழந்தவர்கள் உள்பட) இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் கொரோனா பாதித்தவர்களில் நேற்று முன்தினம் வரை 1,038 பேர் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சத்தால், அவருக்கு அஞ்சலி செலுத்த யாரும் வராமல் இருந்துள்ளனர். இதனால், கடந்த புதன்கிழமை உயிரிழந்த கணவரின் உடலுடன், இறுதிச் சடங்கு செய்ய முடியாமல், திகைத்த மனைவி, 3 நாட்களுக்கு பிறகு தள்ளுவண்டியில் ஏற்றி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றார். 13 வயது மகனுடன், தனி ஆளாக நின்ற மனைவியின் நிலை செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மூலம் பகிரப்பட்டு வருகிறது.