திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை வருகிற 21ந்தேதி வரை காவலில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெயசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து அடிக்கடி அவர் தங்கி சரித் மற்றும் சந்தீப் நாயருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. நட்சத்திர ஓட்டலில் அவருக்கு அறையை தலைமை செயலக ஊழியர் தான் முன்பதிவு செய்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஜெயசங்கருக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை சிவசங்கரன் முன்பதிவு செய்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது, ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை தெரிவித்து உள்ளது.