திருவனந்தபுரம்:
இடுக்கி நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு :
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், கனமழை காரணமாக ஆக.,07 அன்று அதிகாலை 4:30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த பலர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஆக.,08) வரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 38 பேரை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.