கொரோனா தடுப்பு பணியில் சரியான பாதையில் செல்கிறோம் - பிரதமர் மோடி நம்பிக்கை...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இன்று, ஏழாவது முறையாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டார். இன்றைய கூட்டத்தில் 10 மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் சவாலான சூழ்நிலையை எல்லா மாநிலங்களும் எதிர்கொண்டுவருகின்றன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலங்களும் தனித்துவத்தைக் கொண்டுள்ளன. சராசரி இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துவருகிறது.
அதேவேளையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது நாம் கொரோனா தடுப்பு பணியில் சரியான பாதையில் செல்கிறோம் என்பதைக் காட்டுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்தால் கொரோனா பாதிப்பை மிக அதிகமாக குறைக்கலாம். அதனால், கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக 72 மணி நேரத்துக்குள் சோதனை செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.