ரஷியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கலாமா? - ஆலோசனை நடத்துகிறது மத்திய அரசு!!
"தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது" என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உலகில் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்குவது குறித்து மத்திய அரசு நியமித்துள்ள தேசிய நிபுணர் குழு, நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் தேசிய நிபுணர் குழு முக்கியமான இந்த ஆலோசனையை மேற்கொள்ளவுள்ளது.
ரஷியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது, உரிய அனுமதியுடன் அதனை இங்கு உற்பத்தி செய்வது, மாநிலங்களுக்கு தேவையின் அடிப்படையில் அதனை விநியோகம் செய்வது உள்ளிட்டவை குறித்து, நிபுணர் குழு ஆலோசிக்க உள்ளது.
அத்துடன் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மாநில அரசுகளுடன் நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.