சுதந்திர தின விழாவில் பங்கேற்க இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லை... தமிழக அரசு கறார்!!
மூத்த குடிமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை சுதந்திர தின விழாவுக்கு வழக்கம்போல் அல்லாமல், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 8.45 க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார். அதனைத் தொடர்ந்து கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதல்வர் அவர்களை கௌரவிக்க உள்ளார்.
அத்துடன் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள் பொதுமக்கள், பள்ளி -கல்லூரி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.