மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா!

33 Views
Editor: 0

இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம்..

மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா!

இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம். புதிய வகையான நோய்களைப் பரப்பக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவற்றுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புகள் உண்டு” என்று தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க வேளாண்துறை அதிகாரிகள் மக்களுக்குக் கிடைத்த அனைத்து வகையான விதைகளையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ககன்தீப் சிங் பேடி, சுப்பையா

ககன்தீப் சிங் பேடி, சுப்பையா

கனடா நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் விதை பார்சல்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம். அவை முற்றிலும் அங்கீகரிக்கப்படாத விதைகளாக இருக்கலாம். எனவே நம் விவசாயத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். மர்ம விதைகள் கொண்ட பார்சல்கள் கிடைத்தால் உடனடியாக மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகம், “அமெரிக்காவில் கிடைத்ததாகச் சொல்லப்படும் மர்ம விதைகள் சீனாவின் விதைகள் இல்லை. அவை அனைத்தும் போலியானவை. இந்தப் போலி பார்சலைச் சீனாவுக்குத் திருப்பி அனுப்புமாறு அமெரிக்காவின் அஞ்சல் சேவையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் அதுகுறித்துச் சீனா விசாரிக்க முடியும். விதைகளைக் கையாள்வது குறித்த யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் விதிகளைச் சீன தபால் சேவை கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறது” எனச் சீன நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் பல்லுயிர்த்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில விவசாயத்துறை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், விதைச் சங்கங்கள் மற்றும் கழகங்கள், மாநில விதைச் சான்றிதழ் ஏஜென்சிகள், இந்திய விவசாய கவுன்சில் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை மர்ம விதைகள் பார்சல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

விதை

விதை

அண்மையில் இதுதொடர்பாகப் பேசிய இந்திய விதைத் தொழில்துறை கூட்டமைப்பின் பொது இயக்குநர் ராம் கவுந்தின்யா, “மர்ம விதைகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் மூலம் தாவரங்களில் நோய்கள் பரவும், விதைப் பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது சற்று அதிகமாகத் தெரிகிறது. விதைகள் மூலமாகப் பரவும் நோய்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஆனால், மர்ம விதைகள் வருவது நிச்சயமாகக் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்தான். சூழலியல் மண்டலத்திலும், விவசாயத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதுபோன்ற மர்ம விதைகளை உடனடியாக அழித்துவிட வேண்டும்” என்றார்.

விதை

விதை

இந்த விவகாரம் குறித்துத் தமிழ்நாடு விதைச் சான்று மற்றும் விதைப் பரிசோதனை இயக்குநர் சுப்பையாவிடம் பேசினோம். “மத்திய அரசு சார்பில் மர்ம விதைகள் பார்சல் குறித்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை வேளாண் இயக்குநர்களை விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளோம். அங்கீகரிக்கப்படாத விதைகள் இருந்தால், அதை எடுத்து மாவட்ட விதைப் பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்து அழிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். அதேபோலச் சான்று இல்லாத விதைகளை விற்பனை செய்பவர்கள் மீது இந்திய விதைகள் சட்டம் 1966-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களில் விதைப் பரிசோதனை செய்ய வசதிகள் இருப்பதால் அங்கீகரிக்கப்படாத விதைகள் தகுந்த ஆய்வின் மூலம் கண்டறிந்து தடுக்கப்படுகிறது. இதுவரை சீனாவிலிருந்தோ பிற நாடுகளிலிருந்தோ மர்மமான முறையில் பார்சல்கள் வந்ததில்லை. ஆனாலும், இந்த விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசினோம். “இதுபற்றி மத்திய அரசின் சார்பில் அறிவிப்பு வந்திருக்கிறது. வேளாண் இயக்குநர் மூலமாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வேளாண் அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விதை விற்பனை மையங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் தீவிரமாகவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த மர்ம விதைகளும் இருப்பதாகத் தகவல் வரவில்லை. மர்ம விதைகள் தொடர்பாகப் பொதுமக்கள் கவனத்துக்கு வந்தால் agrisec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்” என்றார்.