கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்க வாய்ப்பில்லை - ரிசர்வ் வங்கி:
மும்பை: கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்பதால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கொரோனா லாக்டவுனால் தொழில், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், கடன் தவணையைச் செலுத்துவதில் வர்த்தகர்களுக்கும், தொழில் நடத்துவோருக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் இந்த அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அளித்திருந்த கடன் தவணை செலுத்தும் கால அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. அடுத்த மாதமும் கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான வாய்ப்பில்லை, அவகாசம் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அவகாசம் அளிப்பதால், கடன் பெறுபவர்களின் நடத்தையும் பாதிக்கப்படும், கடன் கொடுத்த தொகையும் வாராக்கடனில் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிக்க வேண்டும், அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. நீண்டகாலத்தில் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிப்பது வங்கியின் நிதி நிலைத்தன்மையையும் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஆதலால் கடன் தவணை செலுத்தும் காலம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றன.