எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான இயக்குனராக சுமைர் அகமட் சையத் என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள குறித்த தொடரில், பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்த போட்டி திட்டமிட்டபடி அங்கு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறுநாட்டுக்கு மாற்றும் யோசனைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதால் குழப்பம் நிலவுகிறது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
இந்தநிலையில் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இயக்குனரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. அதன்படி, சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சிறப்பு அதிகாரியாக சுமைர் அகமட் சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.