ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 45வது பட்டாலியன் கேத்னார் முகாம் உள்ளது. இந்த முகாமில் இன்று வீரர்களிடையே நடந்த பயங்கர மோதலில் 5 படைவீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகித் கூறுகையில், ‘வீரர்களில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தனது சகாக்களை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது’ என தெரிவித்தார்.