இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

105 Views
Editor: 0

திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக நேகாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்..

                      நேபாள பிரதமர் ஷர்மா ஒலி

 

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.

இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக நகர்த்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், பல தசாப்தங்களாக எல்லை பிரச்சினையும் நிலவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளதுதான்.
இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான உணர்வை வளர்ப்பது தேர்தலில் வெற்றிபெற அந்த நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலிக்கு உதவியது. தற்போது கொரோனா விவகாரத்தில் அவரது அரசின் மீது எழுந்துள்ள அழுத்தங்களை சமாளிக்க இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தூண்டி வருகிறார்.

தங்களுக்கு சீனாவின் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நேபாளம் கிளப்பியுள்ள பிரச்சினைக்கு சீனா ஒரு முக்கிய காரணியாக உளளது.

இந்த நிலையில் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி  குற்றம்சாட்டி உள்ளார்.

காட்மாண்டுவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கேபி சர்மா, ‘‘இந்திய தூதரகம் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காட்மாண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும்’’ தெரிவித்துள்ளார்.