அமெரிக்காவின் நியூயோர்க் ஏல மையத்தில் சுவற்றில் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவரது இது உருவாக்கப்பட்டது
இதன் ஆரம்ப விலையாக 8,00,000 டொலரில் ஏலம் தொடங்கிய நிலையில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து, அந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார். இது இந்தியா மதிப்பில் சுமார் 52.35 கோடி. இந்த ஏல விவகாரம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி பேசுபொருளாகியுள்ளது.
இந்த படைப்பை உருவாக்கிய கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வித்தியாசமான படைப்புக்களை உருவாக்குபவர். கடந்த 2016ம் ஆண்டு தங்க கழிப்பறை கோப்பையை உருவாக்கி உலகம் முழுவதும் பிரபலமானார்.
அதன்பின் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை பார்வைக்கு வைத்தார்.
தன்னுடைய இந்த படைப்புக்கு 'காமெடியன்' என அவர் பெயர் சூட்டினார். அவரது இந்த படைப்பு ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் எடுக்கப்பட்ட வாழைப்பழம் மக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து அதே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள், அனைவரும் அந்த வாழைப்பழத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
ஆனால் ஒருநாள் அந்தக் கண்காட்சிக்கு வந்த பிரபல கலைஞர் டேவிட் டதுனா, வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வேறொரு வாழைப்பழம் ஒட்டிவைக்கப்பட்டு, அதற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கண்காட்சி முடிந்ததும் அந்த வாழைப்பழம் ஏலம் எடுக்கப்பட்டவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.