லடாக் மோதலை தொடர்ந்து, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சீன நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்தியாவில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த செயலியை இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் அந்நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதனிடையே, எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யூசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்.ஐ. கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, தனி நபர் தகவல்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு இல்லை என்பதால், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.