வாசிம் பிஜிலி
என்னோட இந்த ஸ்டார்ட்அப் நிறைய மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
எத்தனையோ சாதனையாளர்களைக் கண்டு வியந்துபோயிருக்கிறோம். `சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையல்ல...’ என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறான் சென்னையைச் சேர்ந்த ஒரு சிறுவன்.
வாசிம் பிஜிலிக்கு 13 வயது. பேச்சிலும் உடல்மொழியிலும் அவ்வளவு நம்பிக்கை. மனதில்பட்டதை வெளிப்படையாகப் பேசும் துணிவு... டெக்னாலஜியில் வியக்கவைக்கும் அறிவு என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதிலேயே கேம் டெவலப்பிங் கற்றுக்கொண்ட வாசிம், அதை அடிப்படையாகக் கொண்டு, ‘காட்’ (GOD) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி, அதன் சி.இ.ஓ-ஆகச் செயல்பட்டுவருகிறார்.
தன்னுடைய ஸ்டார்ட்அப் மூலம் கொரோனாவுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் வாசிம் தொடங்கியுள்ள ‘சஃபர்மி- ஜீ’ கேம் ஆப்ஸ் - கூகுள் பிளே ஸ்டோர் அனுமதியைப் பெறும் பரிசோதனையில் உள்ளது. தன்னுடைய ஸ்டார்ட்அப் மூலம் கல்வி நிலையில் அடுத்தடுத்த மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு திட்டங்களுடன் பயணிக்கும் வாசிமை சைதாப்பேட்டையிலுள்ள அவரின் வீட்டில் சந்தித்தோம்.
“நான் முகலிவாக்கத்துல இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். படிப்பைத் தாண்டி ஏதாவது சாதிக்கணுங்கிறது என்னோட ஆசை. எனக்கு டெக்னாலஜிமீது பயங்கர ஈர்ப்பு. அதையே என்னோட கரியராக மாத்திக்கிட்டேன். எங்க வீட்டில் எனக்குக் கொடுத்த முழு சுதந்திரம்தான் இதுக்குக் காரணம். அம்மா, அப்பா ரெண்டு பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்குறாங்க. ‘‘மார்க் பின்னாடி ஓடாதே, பிடிச்சதைப் பண்ணு’’னு எப்பவும் சொல்லுவாங்க. எங்க வீட்டைப் பொறுத்தவரை கிரியேட்டிவிட்டிக்குத்தான் முக்கியத்துவம்.
வாசிம் பிஜிலி
மதிப்பெண் தாண்டி இன்னொரு உலகம் இருக்குதுங்கிறதை எல்லாப் பெற்றோர்களும் புரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கான சின்ன முயற்சிதான் என்னோட ஸ்டார்ட்அப். முழுக்க முழுக்க கிரியேட்டிவிட்டியால் உருவானது. அப்பாவோட சப்போர்ட்னாலதான்
ஸ்டார்ட்அப் சாத்தியம் ஆச்சு. நான் என்னோட கேம் டெவலப்பிங்கை பிசினஸ் ஆக்கப்போறேன்னு சொன்னப்போ, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காம எனக்கு ஆதரவா இருந்தாங்க.”-வாஞ்சையுடன் தட்டிக்கொடுக்கும் அப்பா அஸ்ரோஃப் சலாமின் கைகளைப் பிடித்துக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் வாசிம்.
‘‘மார்க் சம்பந்தமா வீட்டில் ஸ்ட்ரெஸ் கொடுக்கலைன்னாலும், ஸ்கூலில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்துச்சு. என்னால் மனப்பாடம் செஞ்சு பரீட்சை எழுத முடியலை. புரிஞ்சு படிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ இருக்கிற கல்விமுறையில மனப்பாடம் பண்ணி பரீட்சை எழுதணும். யாருக்கு நிறைய மனப்பாட சக்தி இருக்கோ, அவங்க அடுத்தடுத்த கட்டத்துக்கு போவாங்க. மார்க் பின்னாடி ஓடுறதாலதான் 98% மார்க் எடுக்கிறவங்ககூட நீட் போன்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாம போறாங்க. ஒவ்வொரு பசங்களுக்கும் ஓர் இயல்பு இருக்கு. ஆனா, ஸ்கூலில் அத்தனை பேருக்கும் ஒரே முறையில பாடம் நடத்துறாங்க. இப்படி அடிப்படைப் புரிந்துகொள்ளலே இல்லாம இருக்கிறதுனாலதான் நிறைய பேர் திறமை இருந்தும் வேலையில்லாம இருக்காங்க. அதுக்கான மாற்றங்களைத்தான் நான் உருவாக்கிட்டு இருக்கேன்” - எனத் தன்னுடைய செயல்திட்டங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் வாசிம்.
‘‘இப்போ சோதனையில இருக்கற என்னோட கேம் ஆப், கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டது. `மாஸ்க், கிளவுஸ் போட்டு இருக்கறவங்க ஒரு சூப்பர் ஹீரோ’ என்ற தீம்-ஐ அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வுக்காக உருவாக்கியிருக்கேன். இது பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது. கல்விமுறைக்காக நான் உருவாக்கியிருக்கும் திட்டத்தின் பெயர் ‘வினாஸி.’ இதில் அனிமேஷன், கேம், அட்வெஞ்ச்சர்னு நிறைய வகைகள் இருக்கும். குழந்தைகள் எந்த முறையை வேண்டுமானாலும் தேர்வு செய்துக்கலாம். குழந்தைகள் தேர்வு செய்யும் முறையின் அடிப்படையில் குழந்தைகள் ஆன்லைனிலேயே பாடம் கத்துக்க முடியும்.
வாசிம் பிஜிலி
உதாரணமாக, ஒரு குழந்தைக்கு டோரா பிடிக்குதுன்னா, டோராவோட தீம், கேரக்டர் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கான அந்த முழுப் பாடமும் மதிப்பிடலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படிப் பாடம் கத்துக்கும்போது குழந்தைகள் சின்னச் சின்ன விஷயத்தைக்கூட தெளிவாகப் புரிஞ்சுப்பாங்க. திரும்பத் திரும்பக் கேட்கும்போதும், பார்க்கும்போதும் மனசுல இன்னும் ஆழமா பதியும்.
என்னோட இந்தக் கண்டுபிடிப்பு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ‘இளம் அறிவியலாளர்- 2020’ போட்டியில் முதல் பரிசு வாங்கிச்சு. நிறைய பாராட்டுகளுடன் 10 நாள் நாசாவுக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுருக்கு. அடுத்த வருஷம் நாசா போறேன். அந்த அனுபவத்துக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்” என்ற வாசிம், பிசினஸின் அடுத்த கட்ட நகர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
“என்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு பண்ணிட்டேன். இப்போ நிதி திரட்டும் பணியில் இறங்கியிருக்கேன். பணம் கிடைச்சதும் ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு பாடத்தையும் டிஜிட்டலாக மாத்திக் கொடுத்துருவேன். நிச்சயம் என்னோட இந்த ஸ்டார்ட்அப் நிறைய மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். படிப்பை ஜாலியாக படிக்கலாம். எதுவும் சாத்தியமே...” தம்ஸ்அப் காட்டி விடைபெற்றார் வாசிம்.