எதிர்கால உலகை ஆளப்போகும் எலெக்ட்ரிக் வாகனங்கள்! - ஐந்து காரணங்கள் இதோ:
பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயக்கப்படும் வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles-EV) எனப்படுகின்றன. இவை சுற்றச்சூழலுக்கு உகந்தவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தேடலும், விழிப்புணர்வும் மக்களிடம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கச்சா எண்ணெயின் நிலையற்ற தன்மை, அதீத விலை மாறுபாடுகள், சர்வதேச வியாபாரப் போக்கு, எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்டவை உலக நாடுகளை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்ப வைத்துள்ளன.
எனவே, இத்தகைய வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் நன்மை அளிக்கக்கூடியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனவேதான், பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. எனவே, இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Electric car
Pixabay
எலெக்ட்ரிக் வாகனங்களின் சாதக பாதகங்கள் குறித்த ஒரு பார்வை:
1.சுற்றுச்சூழலுக்கு உகந்தவை:
எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. EPA-வின் (Environmental Protection Agency) கூற்றுப்படி பாரம்பரிய எரிபொருள் வாகனங்கள் ஆண்டுக்கு சராசரியாக 4.6 மெட்ரிக் டன் கார்பன் வாயுக்களை வெளியிடுகின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களில் புகை வெளியேற்ற அமைப்பு இல்லை என்பதால், இத்தகைய வாகனங்களில் கார்பன் வாயுக்கள் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் எதுவும் உமிழப்படுவது இல்லை.
அமெரிக்க அரசு நடத்திய ஆய்வுகளின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஐ.சி என்ஜின் (Internal-combustion engine) வாகனங்கள் வெளியேற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடின் அளவு, எலெக்ட்ரிக் கார்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது உண்டாகும் கார்பன்-டை-ஆக்ஸைடை விட மிகவும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது
காற்று மாசுபாடுகள் குறித்த பரவலான சிக்கல்கள் நிலவும் இன்றைய காலகட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள் என்பவை மனிதர்கள் பூமிக்குச் செய்யக்கூடிய நன்மையாகவே கருதப்படுகிறது.
2. எரிபொருள் செலவு குறைவு:
எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது எரிபொருள் செலவு பெருமளவு மிச்சமாகிறது.
உதாரணமாக, ஒரு நாளைக்கு சராசரியாக 50 கி.மீ பயணிக்கும் ஒரு காருக்கான மாதந்திர டீசல் செலவு தோராயமாக 6,000 ரூபாய் வருகிறது. பெட்ரோல் செலவு தோராயமாக 7,500 ரூபாய். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எரிபொருள் செலவு ரூ.1,125 மட்டுமே.
(பார்க்க https://evduniya.com/calculator)
Electric Vehicles
Pixabay
சார்ஜ் செய்ய சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் போது செலவு இன்னும் குறைய வாய்ப்புண்டு.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே இருந்தாலும், இந்தியாவில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.
இந்தியாவில், எரிபொருளின் சராசரி விகிதம் டீசல் ரூ. 70 மற்றும் பெட்ரோலுக்கு ரூ.80 ஆக உள்ளது.
இத்தகைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது எரிபொருள் செலவைப் பெருமளவு குறைக்கக் கூடியவையாக உள்ளன.
3. குறைவான பராமரிப்புச் செலவு:
எலெக்ட்ரிக் கார்களுக்கு எரிவாயு கார்களை விடக் குறைவான பராமரிப்பே தேவைப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனத்தில் ஒரு நல்ல பேட்டரி 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். இவற்றைப் பராமரிப்பது பெட்ரோல் மூலம் இயங்கும் காரைப் பராமரிப்பதற்கான தற்போதைய செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவாகும்.
உதாரணமாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை உயர்திறன் கொண்ட துகள் வடிகட்டி பராமரிப்பும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை பிரேக் திரவ சோதனையும் போதுமானதாய் இருக்கின்றன. இரண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்கு இடையில் ஏர் கண்டிஷனிங் பராமரிப்பு, ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் அல்லது 12,500 மைல்களுக்கு இடையில் குளிர்கால பராமரிப்பு உள்ளிட்ட குறைவான பராமரிப்புத் தேவைகளே உண்டாகின்றன.
ஆயில் மாற்றுதல், வருடாந்திர பராமரிப்பு சோதனைகள் உள்ளிட்ட செலவுகள் எலெக்ட்ரிக் கார்களில் சுத்தமாக இல்லை.
Electric Vehicles
Pixabay
4. செயல்திறன் மற்றும் அமைதி:
செயல்திறன் என்பது எரிபொருள் மூலத்திலிருந்து வரும் ஆற்றலின் அளவைக் குறிக்கிறது.
எரிபொருள், 'எரிவாயு அல்லது மின்சாரத்தில் இருந்து கிடைக்கும் ஆற்றல் வாகனத்தின் சக்கரங்களை இயக்குவதற்கான இயக்க ஆற்றலாக உரிய முறையில் மாற்றப்படுகிறது.
வாயுவால் இயங்கும் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் செயல்திறன் மிக்கவை. உதாரணமான எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள பேட்டரிகள் 59 முதல் 62 சதவிகித ஆற்றலை வாகன இயக்கமாக மாற்றுகின்றன.அதே நேரத்தில் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்கள் 17 முதல் 21 சதவிகிதம் வரை மட்டுமே வாகன இயக்கமாக மாற்றும். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் முடுக்கம் (Acceleration) எலெக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஓரு ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை வேறு வகை ஆற்றலாக மாற்றலாம் என்கிறது ஆற்றல் அழிவின்மை விதி. எனவே, ஒரு வகை ஆற்றலை வேறுவகை ஆற்றலாக மாற்றும்போது அங்கு ஆற்றல் குறிப்பிட்ட அளவு வீணாகும். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களில் வீணாகும் ஆற்றல் குறைவு என்பது அதன் சிறப்புகளில் ஒன்று!
எலெக்ட்ரிக் வாகனங்களில் மின்சாரம்,இய க்க ஆற்றலாக (Mechanical Energy) மாற்றப்படுகிறது. அளிக்கப்படும் மின்ஆற்றலில் 20-40 சதவீதம் மட்டுமே வீணாகிறது. எஞ்சியவை இயக்க ஆற்றலாக மாறிவிடுகின்றன. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் அளிக்கப்படும் வேதியியல் ஆற்றலில் (Chemical Energy) 60-80 சதவீதம் வீணாகி மீதமுள்ளவை மட்டுமே இயக்க ஆற்றலாகக் கிடைக்கிறது.
Electric vehicle
ஒரு வழக்கமான கார்களின் சத்தம் மிக அதிகமாக இருக்கும். இன்றைய வாகனங்கள் வெளியிடும் சத்தத்தினால் சாலைகளில் ஒலி மாசு ஏற்படுகிறது.
இதனால், மனிதர்களுக்கு காதுகள் தொடர்பான வியாதிகள்,உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புண்டு. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக மிக அமைதியாக இயங்குகின்றன. எலெக்ட்ரிக் கார்கள் சத்தமின்றி இயங்குவதால் பாதசரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இவற்றின் வருகையைத் தெரிவிக்க பிரத்யோக ஒலி எழுப்பும் கருவியினை இத்தகைய வாகனங்களில் நிறுவ வேண்டும் என அமெரிக்காவின் செனட் சபை முன்மொழிந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
5. சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்:
எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகள் வழங்குகின்றன.
இந்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy-MNRE) மின்சார வாகனங்களுக்கு மானியங்களை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் கார்களுக்கு ரூ 1,50,000 வரை மற்றும் இரு சக்கர வாகனங்களில் ₹ 30,000 வரை மானியங்கள் கிடைக்கும்.
Electric car
Pixabay
மின்சார வாகனங்களைத் தனிநபர் அல்லது வணிக நோக்கத்திற்காக கடனில் பெறுகையில் செலுத்தும் வட்டிக்கு மத்திய நிதியமைச்சகம், வருமானவரிச்சட்டம் பிரிவு 80EEB இன் கீழ் ரூ.1,50,000 வரை விலக்கு அளிக்கிறது.
தமிழகத்தில் 2019 இல் வெளியிடப்பட்ட மின்சார-வாகனக் கொள்கை (TN New Electric-Vehicle Policy) 50,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதையும்,1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலைகளுக்கு மூலதன மானியங்கள், மாநில ஜி.எஸ்.டி.யின் தள்ளபடி, நில செலவுக்கான மானியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை, எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி செலவுகளைப் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகக்களுக்கும் 100 சதவீத சாலை வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
எனவே மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் செல்வதற்கு HOV எனப்படும் உயர் ஆக்கிரமிப்பு வாகன பாதையில் (High-occupancy vehicle lane) முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் நெரிசலற்ற பயணமும்,பயண நேரம் குறையவும் வாய்ப்புண்டு.
Electric cars
குறைபாடுகள்:
எலெக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பிடத்தக்க சில குறைபாடுகளும் உள்ளன.
* எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி விலை மிக அதிகம். எனவே, பேட்டரி மாற்றுவதற்கு அதிக செலவு பிடிக்கும்.
* வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் நிலையங்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளன.
* எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஒரு பெரிய அளவிலான ஆரம்பகட்ட முதலீடு தேவை.
* வாகனத்தை ரீசார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும்.
* எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்க உகந்தவை.
* வாகனங்களின் வகை குறைவு என்பதால் குறுகிய வரம்புகளும், குறைவான தேர்வுகளுமே கிடைக்கின்றன.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தங்களது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க, அந்நாட்டின் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.அப்போதுதான் அந்நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய முடியும்.எலக்ட்ரிக் வாகனங்கள் கச்சா எண்ணை இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்கக் கூடியவை.
பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட வளங்கள் புதுப்பிக்க இயலாதவை (Limited Resources) இவற்றின் ஆற்றலை நாம் ஒருமுறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த இயலாது. மனிதனது அளவுக்கதிகமான சுரண்டல் காரணமாக புதுப்பிக்க இயலாத வளங்கள் தொடந்து குறைந்து கொண்டே போகின்றன.
Electric cars
ஆனால் நீர்,காற்று,சூரிய ஒளி உள்ளிட்டவை புதுப்பிக்கத்தக்க வளங்கள் (Renewable Resources) ஆகும். இவை, என்றுமே தீர்ந்து போகாதவை.இவற்றை மீண்டும் மீண்டும் நாம் பல்வேறு உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம்.
புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, எலக்ட்ரிக் வாகனங்களை இயக்கும்போது, அது பூமியின் சுற்றுச்சூழக்கு மட்டுமல்லாது வளங்களின் நிலைப்புத் தன்மைக்கும் சாதகமாக அமையும்.
எங்கெல்லாம் இயக்க ஆற்றல் செயல்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த ஆற்றலுக்குச் சமமான வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது என்கிறது ஜூல் விதி!
எலெக்ட்ரிக் வாகனங்களால் உண்டாகும் வெப்பம் மிகவும் குறைவு. இதனை ஒரு சங்கிலித் தொடர் போல நீட்டினால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இயக்க ஆற்றல் உற்பத்தியாகும்போது வெளிப்படும் வெப்பமும், கார்பன் வாயுக்களின் அளவும் குறைவு-புவிவெப்பமடைதல், புகை மாசுக்கள் குறைவு- ஓசோன் படலம் பாதிப்பு மற்றும் நோய்கள் குறைவு - பூமி பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய வாழ்வு என எலக்ட்ரிக் வாகனங்கள் சூழல் சார்ந்து பெரும் பயனளிக்கக்கூடியவை.
எனவே, எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் பயனளிக்கக் கூடியவை. இவற்றின் செயல்திறன் சார்ந்தும், நடைமுறை சார்ந்தும் உள்ள சிற்சில குறைகள் நிவர்த்தி செய்யப்படுமாயின், இவை எதிர்கால உலகை நிச்சயம் ஆளும்!