சுற்று சூழல் தாக்க வரைவில் மாற்றம் வேண்டும் எனக்கூறி நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையை குறிப்பிட்டு நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்டு 11-ந்தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம். அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வரவேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கார்த்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.