பெற்றோர் புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்
பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுப்பதற்கு என்ன வழி பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
உலக அளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
குழந்தைகளை பெற்றோர்கள் புகையிலைப் பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர்.
தமிழகத்தில் பொறுத்தவரை புகை பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது, உண்மையிலே குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் பெற்றோர்கள் புகையிலை பழக்கத்தை அறவே விடவேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அறிவுறுத்துகிறார்.
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழந்து வருகின்றனர், இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.
ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும் பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகவும் புகையிலைப் பொருட்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது.
புகை பழக்கம் நமக்கு மட்டுமன்றி நமது சந்ததியின் உயிருக்கும் பகை என்பதை அறிய வேண்டிய தருணம் இது….