குழந்தைகளுக்கு தொப்புள் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?
தொப்புள் கொடி (Umbilical cord) என்பது பிறக்கும் முன்னர் தாய்க்கும் குழந்தைக்குமான உணவுப் பாலம். குழந்தையின் சுவாசப் பாதையும் அது தான். குழந்தை பிறந்த பின், அது தாய்க்கும் சேய்க்குமான உணர்வு பாலமாகி விடுகிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அறுத்து விடுவார்கள்.
குழந்தை இயற்கையான சுவாசத்துக்கு பழகி விடும். தாய்ப்பால் அருந்தத் தொடங்கி இயல்பான இவ்வுலக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடும். ஒரு சில குழந்தைகளுக்கு தொப்புள் லேசாக வீங்கினாற் போல இருக்கும். அழும் போது இன்னும் அது புடைத்துக் கொள்ளும்.
இந்த தொப்புள் வீக்கம் (Belly bulge) எதனால் ஏற்படுகிறது?
பிறந்த சில குழந்தைகளுக்கு இது போல ஏற்படுவது உண்டு. பிறந்த உடனே தெரியாது. சில நாட்கள் ஆகும். கிட்டத் தட்ட ஒரு மாதத்தில் இந்த வித்தியாசத்தை கண்டறியலாம். தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறிய தசையைத் தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி.
ஒரு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ, மலம் போவதற்காக முக்கி தனது வயிற்றைத் தள்ளினாலோ, அழுத்தம் காரணமாக உள்தசை கிழிந்து உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளின் ஊடாகத்தள்ளும். ஒரு நாள் மலச்சிக்கலால் இது ஏற்படாது.
தொடர் மலச்சிக்கல் பிரச்னை தான் அந்த பலவீனமான பகுதியை மேலும் பலவீனமாக்கும். சில ஆண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க ரொம்ப சிரமப்படுவார்கள். சிறுநீர் வெளியேறும் துவாரம் மிகச் சிறியதாக இருப்பதே அதற்குக் காரணம். இதை Phimosis என்பார்கள். இதனால் அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படும். அதற்காக ரொம்ப அழுத்தம் கொடுக்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
அதனால் தான், இது அப்படியே வெளியே வந்து விடாமல், தூங்கும் போது உள்ளே அழுந்தி இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அழுதாலோ இன்னும் பெரிதாகத் தோன்றும். இது 90 - 95 சதவிகிதக் குழந்தைகளுக்குத் தானாகவே சரியாகி விடும்.
குழந்தை வளர வளர குழந்தையின் வயிற்று தசைகள் பலமடைந்து குடல் வெளி வருவது நின்று விடும். இதனால் அந்தப் புடைப்பு இருக்காது. குழந்தை பிறந்த போது தொப்புளை சரியாக கட்டாததால் காற்று உள்ளே போய் அப்படி ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அது உண்மையல்ல. குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தொப்புள் கொடியின் தோல் பகுதி தானாக உலர்ந்து விடும். இது உள்ளே இருக்கும் தசை திறந்திருப்பதால் ஏற்படுவது தான்.
இந்த வீக்கத்தை கட்டுப்படுத்த குழந்தையின் வயிற்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி வைக்கலாம். அல்லது துணியால் கட்டி வைக்கலாம். இது அந்த குடல் வெளி வருவதை தவிர்த்து அந்த இடத்தை நார்மலாக்கும். இப்பிரச்னை மலச்சிக்கலால் ஏற்படுகிறதா? அல்லது சிறுநீர் துவாரம் அடைப்பா? அல்லது வேறு எதாவது காரணமா? பரிசோதித்து அறிந்து, அதை சரி செய்தாலே இந்தப் பிரச்னையை தவிர்த்து விடலாம்.
உதாரணமாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால் கொடுப்பார்கள். அதனால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். குடல் அசைவு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் உணவின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை அதைத் தவிர்க்கும் பட்சத்தில் இந்தப் பிரச்னை இந்தக் குழந்தைக்கு சரியாகி விடலாம். சிறுநீர் பிரச்னை உள்ள ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குதல் போன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டால்,
இந்தப் பிரச்னையும் தானாகவே மெல்ல குறையும். பொதுவாக இது மரபுரீதியான சிக்கல் அல்ல என்றாலும், இது ஏற்பட காரணமாக இருக்கும் அடிப்படை பிரச்னைகளால் இது அடுத்து வரும் தலை முறைக்கும் வரலாம்!’’