தப்பித்தவறியும் செப்பு பாத்திரத்தில் இளநீர் ஊற்றிக் குடிக்க வேண்டாம்! பித்து பிடிக்க வைக்கும் பாட்டியின் பதில்!
சட்னி அரைக்க தேங்காய் உடைக்கச்சொன்னால், பட்டென்று உடைத்துவிடாமல், தேங்காய் தண்ணீர் வடியும் அளவுக்கு பக்குவமாக உடைத்து குடித்த பின்னர் தான், தேங்காய் மூடி அம்மா கைகளுக்கு போகும். இந்த பழக்கம் எப்போ விடுமோ தெரியல, 25 வயதை கடந்த பிறகும், இன்னும் தொடர்கிறது. இப்படித்தான் ஒருமுறை, பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில், இளநீர் குடிக்க வாய் பரபரத்தது. தென்னந்தோப்பு ஒட்டியே பாட்டி வீடு இருக்கும் என்பதால், இளநீருக்கு பஞ்சமில்லை.
அரிவாளும் கையுமாக சென்று, இரண்டு இளநீரை வெட்டி வந்து, சீவிக்கொண்டிருந்தேன். பாத்திரத்தில் ஊற்றி குடிக்கலாம் என்று, செப்பு பாத்திரத்தை எடுத்து வந்து அருகில் வைத்திருந்தேன். அந்த நேரம் பார்த்து, என்னுடைய குறும்புத்தனத்தை எல்லாம் கவனித்து வந்த பாட்டி, "செப்புல இளநீர் குடிச்சா பித்து பிடிக்கும். போயி வேற பாத்திரம் எடுத்துட்டு வா" என்றார். இதென்னடா புது புரளியா இருக்கு என்று நினைத்துக்கொண்டே, பாட்டி சொன்ன மாதிரியே செய்து முடித்தேன்.
ஊருக்கு திரும்பிய பிறகு, அப்பாவிடம் கேட்டபோது தான் இதற்கான பதில் கிடைத்தது. இளநீரில் இயற்கையான சர்க்கரை, புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சத்துகள் நிறைந்து இருக்குமாம். அது காற்றுடன் தொடர்புகொள்ளாத வரையில் ஒன்றும் ஆகாது. இளநீரை வெட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டால், சிறிது நேரத்தில் தன் இயற்கை சத்துகளை இழக்க ஆரம்பிக்கும். இன்னும் அதிக நேரம் வெளியில், அப்படியே வைத்திருந்தால், முடை நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.
அதுவே இளநீரை பிடித்து செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் போது, அதிலுள்ள சத்துக்கள், ரசாயன மாற்றங்களை உண்டாக்கும். அதனை அருந்தும் போது, கொஞ்சம் வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படக்கூடுமாம். மற்றபடி ஆ பத்தாக எதுவும் நடக்காது என்றாலும், முடிந்த வரையில் செப்பு பாத்திரத்தில் ஊற்றி இளநீர் குடிக்காமல் இருந்தால் நல்லதாம். பாட்டிக்கு இந்த அளவுக்கு நுணுக்கம் தெரியவில்லை என்றாலும், அவர் அறிவுக்கு எட்டிய வரை தெரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் தானே. என்றைக்கும் அனுபவம் தான், நின்னு பேசும்.