சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம்: தெண்டுல்கரின் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் பிராட் ஹாக் கணிப்பு

60 Views
Editor: 0

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர்..

புதுடெல்லி,

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார்.

தெண்டுல்கரின் சாதனையை தற்போது 70 சதங்களுடன் (டெஸ்டில் 27 சதம், ஒரு நாள் போட்டியில் 43 சதம்) உள்ள இந்திய கேப்டன் விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்று ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஹாக், ‘தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் நிச்சயம் முறியடிக்க முடியும். தெண்டுல்கர் விளையாடத் தொடங்கிய போது இருந்ததை விட இப்போது வீரர்களின் உடல்தகுதி பராமரிப்பு சிறப்பாக உள்ளது. உடல்தகுதியை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க தரம்வாய்ந்த நிபுணர்கள் உதவுகிறார்கள். அது மட்டுமின்றி வீரர்களுக்கு உதவுவதற்கு கிரிக்கெட் வாரியமே நிறைய உடல்தகுதி நிபுணர்களையும், டாக்டர்களையும் கைவசம் வைத்துள்ளது. ஏதாவது சிறிய காயம் என்றாலும் வீரர்கள் உடனே சுதாரித்து விடுகிறார்கள். காயப்பிரச்சினையால் ஒரு வீரர் தவற விடும் ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, கோலியால் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்து விட முடியும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.