1981ம் ஆண்டு இதே நாளில் அப்போதைய பீகார் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி, பள்ளியளவில் பேட்மிண்டன், கால்பந்து போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். அவரின் கால்பந்து கோல்கீப்பிங் திறமையை கண்ட கால்பந்து பயிற்சியாளர் 10ம் வகுப்புக்கு பிறகு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார்.
அன்று தொடங்கிய கிரிக்கெட் பயணம், இன்று தோனி உலகப்புகழுக்கு காரணமாக அமைந்தது. பதின்பருவத்தில் பீகாரில் பள்ளி அணிக்காகவும், கிளப் அணிகளுக்காக ஆடிய போட்டிகளில் ஒவ்வொரு சிக்சருக்கும் 50 ரூபாய் என்ற பரிசு அவரை உற்சாகப்படுத்தியது. அப்போதுதான் அவர் ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்கத் தொடங்கினார்.
ஜார்க்கண்ட் மாநிலம் உதயமானதும் அம்மாநிலம் சார்பாக 2002-03ம் ஆண்டுகளில் இந்திய ஏ அணிக்கு தேர்வானார். பின்னர் டிராவிட் விக்கெட் கீப்பராக இருந்த நேரத்தில், வங்கதேசத்துக்கு எதிரான தோனியின் முதல் போட்டியிலேயே தோனி டக்அவுட் ஆகி வெளியேறினார். பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளிலும் தோனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
2005ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனியை 3வது பேட்ஸ்மானாக களமிறக்கினார் கங்குலி, 10 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் என அவர் தெறிக்கவிட்ட ஆட்டமே இன்று வரை அவரின் அதிகபட்சமான 183 என்ற ஸ்கோராக உள்ளது.
2007ல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த தோனி, 2011ல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் துவங்கிய காலமது. விரட்டிப் பிடிக்க எத்தனை ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் சென்னை அணியின் சிங்கம் தோனி இருந்தால் எந்த இலக்கும் சாத்தியமே என்று ரசிகர்களை நம்பவைத்தார்.
பைக், நாய்க்குட்டிகள் மீது தீராத காதல் கொண்ட தோனி, சேவாக்குடன் மோதல், பழைய வீரர்களை புறக்கணித்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், கடந்தாண்டு உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் form சிறப்பாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்தது. அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டையே தோனி ஓராண்டுக்கும் மேல் ஆடவில்லை.
மகள் மற்றும் மனைவியுடன் தோனி