எங்களின் நம்பிக்கையை சச்சின் சீர்குலைத்தார்: நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வகார் யூனிஸ்!

14 Views
Editor: 0

சச்சின் விளையாடியது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் பகிர்ந்து கொண்ட விஷயங்களை இங்கே காணலாம்..

 

1999-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஜனவரி 28 முதல் 31ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அப்போட்டியில் இந்திய அணிக்கு 271 ரன்களை வெற்றி இலக்காகப் பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்திருந்தது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சச்சின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி (136 ரன்கள்) இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இருப்பினும் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் இந்திய அணி செயல்பட்ட விதம் குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு வகார் யூனிஸ் பேட்டியளித்துள்ளார்.

“எனது வாழ்வில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி என்றால் அது சென்னையில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தான். முதல் இன்னிங்ஸ் மந்தமாகச் சென்றாலும், இரண்டாவது இன்னிங்ஸ் விறுவிறுப்பாகச் சென்றது. 271 ரன்களை துரத்தி வந்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.

வெற்றி எங்களுக்குத் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சச்சின் மற்றும் நயன் மோங்கியா இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். விக்கெட்களை வீழ்த்தி வெற்றிபெற்று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கையில், நயன் மோங்கியா சிக்சர் அடித்து எங்களைச் சோர்வடையச் செய்தார்.

விரைவில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் விளையாடி இருப்பார் என்று நினைக்கிறேன். மோங்கியா 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போராடி அவரை வீழ்த்தினோம். இருப்பினும் வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வரவில்லை. ஏனென்றால் சச்சின் மறுமுனையில் அவுட் ஆகாமல் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.

சச்சின் சதம் விளாசிய உடனே இந்திய அணிதான் வெற்றி பெறப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சச்சினின் விக்கெட்டை வீழ்த்த பல வழிகளில் முயற்சி செய்தோம். கடைசியாக இந்திய அணி வெற்றியை நெருங்கிய நேரத்தில் சச்சினை வீழ்த்தினோம். 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சச்சின் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் கைவசம் 4 விக்கெட்கள் இருந்தன. 5 முதல் 6 ஓவர்களில் எஞ்சியிருந்த 4 விக்கெட்களையும் வீழ்த்தி நாங்கள் த்ரில் வெற்றிபெற்றோம். எனது வாழ்க்கையில் நான் விளையாடிய சிறந்த டெஸ்ட் போட்டியாக இது இருக்கிறது” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வகார் யூனிஸ் கூறியுள்ளார்.