கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் தொடரை இந்தியாவிற்கு வெளியே நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. இதையடுத்து, இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனிடையே, நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.
மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்டால், அடுத்தபடியாக தொடருக்கான வேலைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அட்டவணை இன்னும் முடிவாகவில்லை என கூறிய பிரிஜேஷ் படேல், ஐபிஎல் குழு கூட்டம் அடுத்த 10 நாட்களில் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் தேதி குறிப்பிடப்படும் என்றும் கூறினார்.
ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால், ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா மற்றும் ஆரம்ப கட்ட லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டி நடத்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தடையாக இருந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக ஐசிசி அறிவித்ததையடுத்து ஐ.பி.எல். தொடர் நடத்தும் அணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.