டென்னிஸ் சம்பியனாகி பல சாதனைகளை வசப்படுத்திய கோகோ கௌஃப்

114 Views
Editor: 0

மகளிருக்கான டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் அவர் சம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்..

மகளிருக்கான டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் அவர் சம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

 

உலகின் 3ஆம் நிலை வீராங்கனையான அவர், இறுதிச்சுற்றில் 3-6, 6-4, 7-6 (7/2) என்ற செட்களில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு ஒலிம்பிக் சம்பியனுமான சீனாவின் ஜெங் கின்வென்னை வீழ்த்தி வாகை சூடினார். இருவரும் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, கௌஃப் 2-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறார். முன்னதாக, உலகின் டாப் 2 வீராங்கனைகளான, பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோரை குரூப் சுற்றில் வீழ்த்தினார் கௌஃப்.

 

சம்பியனான கோகோ கௌஃபுக்கு ரூ.40.50 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

 

கடந்த 10 ஆண்டுகளில் சம்பியனான முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை கௌஃப் பெற்றுள்ளார். இதற்கு முன், முன்னாள் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் 2014-இல் இங்கு வாகை சூடினார். போட்டி தொடங்கப்பட்டது முதல் (1972) சம்பியனான 4-ஆவது அமெரிக்கர் கௌஃப். அவருக்கும் முன், கிறிஸ் எவெர்ட், டிரேசி ஆஸ்டின், செரீனா வில்லியம்ஸ் வாகை சூடியுள்ளனர்.

 

இப்போட்டியில் கடந்த 20 ஆண்டுகளில் கிண்ணம் வென்ற இளம் வீராங்கனை (20) என்ற சாதனை கௌஃப் வசமாகியுள்ளது. முன்னதாக, ரஷ்ய முன்னாள் நட்சத்திரமான மரியா ஷரபோவா 2004-இல் தனது 17-ஆவது வயதில் சாம்பியனாகினார். கௌஃப் அந்த ஆண்டுதான் பிறந்தவராவார். அதற்குப் பிறகு சம்பியனானவர்களில் கௌஃபே இளம் வயது வீராங்கனை.