நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் பொருட்கள்- பிரதமர் மோடி அறிவிப்பு.

131 Views
Editor: 0

ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்..

                                பிரதமர் மோடி

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டமாக கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிப்பின்போதும், பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார். 

5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை அமலுக்கு வருகின்றன. 
அதேசமயம், லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளால் அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை நமது நாடு சிறப்பாக  எதிர்கொண்டுள்ளது.

ஊரடங்கை மக்கள் பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள். 

ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் தொடங்கி உள்ளன. மழைக் காலம் தொடங்க உள்ள சூழலில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் சளி காய்ச்சல் வரும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முன்பைவிட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுக்கு கூட  மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு கூட அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்தோம். பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டிலும் ஒரே விதிதான். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.

நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. இதற்காக மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்ககு 1.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப்பருப்பும் வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அதேசமயம் நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உலகச்செய்திகள்