8 தோல்விகளை சந்தித்த இலங்கை - 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றுமா?

67 Views
Editor: 0

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது..

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

11 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் ஒருநாள் ஆட்டத்தில் களமிறங்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது 11 ஆண்டுகளின் பின் ஒருநாள் தொடரில் ஆட இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கிடையில் முதலில் நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இறுதியாக இலங்கை மண்ணில் கடந்த 2013 நவம்பரில் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன் பின் தற்போது 11 ஆண்டுகள் கழிந்து இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது. முதல் போட்டி இன்று தம்புள்ளையில் நடைபெறும் நிலையில் இரண்டாவது மற்றும் 3வது போட்டிகள் 17 மற்றும் 19 திகதிகளில் பல்லேகலையில் நடைபெறவுள்ளது. 

நேருக்கு நேர்

கடந்த 1979ஆம் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் முதல் ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெற்றது. அன்று தொடக்கம் இன்று வரையில் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 102 ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 52 போட்டிகளிலும், இலங்கை அணி 41 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையிலும், 8 போட்டிகள் முடிவற்றதாகவும் அமைந்துள்ளன.


ஓராண்டின் பின் ஒருநாள் மோதல்  

இரு அணிகளும் இறுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் மோதியிருந்தன. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியது. அதன் பின்னர் தற்போது ஓராண்டு கழிந்து மீண்டும் ஒருநாள் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. 


8 போட்டிகளில் வரிசையாக தோல்விகண்டுவரும் இலங்கை

இலங்கை அணியானது நியூசிலாந்து அணியுடன் கடந்த 2015 டிசம்பரில் ஒருநாள் போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர் இன்றுவரையில் 9 ஆண்டுகளாக 8 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. எனினும் தற்போது இலங்கை அணி சிறந்த பார்மில் காணப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

இருதரப்பு தொடர்கள்

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரையில் 17 இருதரப்பு ஒருநாள் சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 10 தொடர்களை நியூசிலாந்து அணி வென்றுள்ள நிலையில், இலங்கை அணி 3 தொடர்களை மாத்திரம் வென்றுள்ளது. 4 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.


12 ஆண்டுகளாக ஒருநாள் தொடரை கைப்பற்றாத இலங்கை

இலங்கை அணி இறுதியாக 2012 நவம்பரில் நியூசிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதன் பின்னர் தற்போது 12 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது. இந்த 12 ஆண்டுகால இடைவெளியில் 5 தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் 2013ல் நடைபெற்ற தொடர் 1-1 என சமநிலையிலும் மீதி 4 தொடர்களை நியூசிலாந்து அணி வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 

புதிய தலைமை அசலங்கவின் வெற்றிகரமான பயணம்

இலங்கை வெள்ளைபந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20) அணியின் புதிய தலைவராக தற்போது சரித் அசலங்க செயற்பட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்திய அணியுடனான இருதரப்பு தொடரின் போது இந்த மாற்றம் நிகழ்ந்தது. சரித் அசலங்க தலைமையில் இலங்கை அணி இந்தியாவுடன் டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை 27 வருடங்கள் பின் வென்று சாதனை படைத்தது. அதன் பின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை அசலங்க தலைமையிலான இலங்கை அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. 

நியூசிலாந்துடன் 14 ஆண்டுகளின் பின் தொடர் தோல்வியை தக்கவைத்த இலங்கை

சரித் அசலங்க தலைமையில் நியூசிலாந்து அணியுடனான தொடரில் இலங்கை அணியானது முன்னதாக இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி தொடரை 1-1 என சமன் செய்தது. கடந்த 2010ஆம் ஆண்டு இரு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ததன் பின்னர் நியூசிலந்து அணியுடன் தொடர்ச்சியாக 14 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவந்த இலங்கை அணி தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த தொடரை சமன் செய்தது. 

சனத்தின் பாசறையில் நியூசிலாந்துடனும் சரித்திரம் படைக்குமா இலங்கை ?

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட சனத் ஜெயசூர்ய ஒரு வருட காலத்திற்கு இலங்கை அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிறிஸ் சில்வர்வூட் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார்.

அவர் இலங்கை அணியை ஊக்குவிப்பதற்காகவும், ஒரு அணியாக குறிப்பிடத்தக்க சாதனைகளை அடையவும் தனது பயிற்சி திறன்களை வெளிப்படுத்தினார். அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. அடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

அடுத்து நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி 15 வருடங்களின் பின் கைப்பற்றி சாதனை படைத்தது. இறுதியாக மேற்கிந்திய தீவுகளுடன் முதல் முறையாக டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என்பவற்றை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்தது. எனவே இவ்வாறு பல சாதனைகளை சனத் ஜெயசூர்யவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி பதிவு செய்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியுடனும் 12 ஆண்டுகளின் ஒருநாள் சர்வதேச தொடரை வென்று இலங்கை அணி சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது. 

ஹஸரங்கவுக்கு பதில் ஹேமந்த 

நிறைவடைந்த டி20 சர்வதேச தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச தொடரிலிருந்து விலகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பந்துவீசிய ஹஸரங்க தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்தார். எனினும் தொடர்ந்து பந்துவீசிய அவர் துடுப்பெடுத்தாடவும் களமிறங்கினார். 

இந்நிலையில் உபாதையை கருத்திற்கொண்டு அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதில் வீரராக இளம் சகலதுறை வீரர் துஷான் ஹேமந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.