டெல்லி: பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கம், எல்லை பிரச்சனை, சீன செயலிகளுக்கு தடை போன்ற சூழ்நிலையில் நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முதல் கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்நிலையில், மத்திய அரசு நேற்று இரவு ஊரடங்கு தளர்வு 2-ம் கட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்த ஊரடங்கு தளர்வு நாளை இருந்து அமலுக்கு வருகின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இந்த உரையின் போது முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம். இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று உரையை தொடங்கினார். அவர் கூறியதாவது;
* பொதுமுடக்கத்தின் 2ம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது.
* உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா போர் களத்தில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
* சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட காலத்தில் அன்லாக் 2-ல் நாம் நுழைகிறோம்- மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.
* இந்த தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது.
* ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது.
* பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையை பொதுமக்கள் சாதாரண்மாக கருத வேண்டாம்.
* அன்லாக் ஆரம்பிக்கப்பட்டது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைய ஆரம்பித்துவிட்டது.
* நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
* 2 அடி இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
* அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்திய மக்கள் 2 மடங்கு அளவில் பயனடைந்துள்ளனர்.
* வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ50,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
* ஏழை மக்கள் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
* தற்போதைய சூழலை சாதரணமாக கருதிவிடக் கூடாது.
* நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும். இன்னும் ஐந்து மாதங்களுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்காக ரூ .90,000 கோடி அதிகம் செலவிடப்பட உள்ளது.
* ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது; நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
* பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான்.
* பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாத இறுதிவரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
* சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.
* ஏழைகள் மேம்பாட்டுக்காக ஏற்கனவே ரூ1.75 கோடி திட்டத்தை அறிவித்துள்ளோம். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவில் நிலைமை மிகவும் சீராகவே உள்ளது.
* சட்டம் மற்றும் விதிமுறைக்கு மேலானவர்கள் யாரும் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
* விவசாயிகளுக்கும், வரிசெலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்; பருவநிலை காலத்தில் விவசாயத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.