லடாக்: இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் தணிந்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்டு ராணுவம் இடையே கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்தியா - சீனா இடையிலான லடாக் மோதல் ஏறத்தாழ முடியும் நிலைக்கு வந்து இருக்கிறது. கடந்த மே 5ம் தேதி தொடங்கிய இரண்டு நாட்டு மோதலுக்கு கடந்த ஜூலை 5ம் தேதி தீர்வு காணப்பட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக கடந்த ஜூன் 15-16 தேதிகளில் லடாக் எல்லையில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பெரிய அளவில் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.
என்ன பேச்சுவார்த்தை இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்த பிரச்சனையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தைதான் இதற்கு காரணம். இவர்கள் வீடியோ கால் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.
சீன படை வெளியேறியது
இந்த நிலையில் கல்வான் பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.அதை தொடர்ந்து இன்னொரு பக்கம் டெப்சாங் மற்றும் பாங்காங் திசோ பகுதியில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. முதலில் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்காமல் இருந்தது. ஆனால் இங்கிருந்தும் இன்று காலை சீனா படைகளை வாபஸ் வாங்கியது .
வேறு எங்கு இன்னும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. அங்கு சீனாவின் படை வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சீனாவின் நவீன ஆயுதங்கள் இன்னும் அங்கு இருக்கிறது . அதேபோல் சீனாவின் வாகனங்களும் இங்கே இருக்கிறது. ஹாட்ஸ்பிரிங்ஸ் என்பது பாங்காங் திசோ மற்றும் கல்வான் இடையே இருக்கும் பகுதிதான் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகும்.
மீண்டும் மீட்டிங்
இந்த நிலையில் இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றம் தணிந்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டு நாட்டு ராணுவம் இடையே கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.முழுமையாக எல்லையில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கும் வகையில் இன்றைய ஆலோசனை நடக்க உள்ளது. இந்தியாவின் சார்பாக லெப்டினன்ட் கர்னல் ஹரீந்தர் சிங் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.