அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்- டிரம்ப் திட்டவட்டம்

45 Views
Editor: 0

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

                          அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் பொருளாதார பாதிப்பை சரிசெய்ய ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தும் முயற்சியிலும் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.

அந்த வகையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் சில அமெரிக்க மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.

ஜனாதிபதி டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக இருக்கும் மாகாணங்களும் இதில் அடங்கும். மேலும் அமெரிக்க மத்திய அரசும் இந்த உத்தரவை நாடு முழுவதும் பிறப்பிக்க வேண்டும் என மாகாண ஆளுநர்கள் மூத்த சுகாதாரத்துறை நிபுணர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் கறாராக உள்ளார். முகக்கவசம் அணிவதால் நோய் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்து வருகிறார். மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாளில் இருந்து அவர் முகக்கவசம் அணியாமலேயே அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இதற்கு எதிர் கட்சியினர் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் டிரம்ப் முகக்கவசம் அணியாமலேயே இருந்து வந்தார்.

இருப்பினும் சமீபத்தில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்த படி அவர் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதனிடையே நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசிய அமெரிக்காவின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி பாசி, “பொதுமக்கள் முகக்கவசம் அணிய மத்திய மற்றும் மாகாண அரசுகள் கட்டாயப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. நாம் அனைவரும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு ஒருபோதும் உத்தரவிடமாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது டிரம்ப் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன். முகக்கவசம் அணிவது குறித்து தேசிய அளவில் ஆணை பிறப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருக்க வேண்டும்” என கூறினார்.
 

 

உலகச்செய்திகள்