டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சில், ஐடியாஸ் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உரையாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். முன்னதாக, மத்திய அமைச்சர்கள், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும் இந்த மாநாட்டுக்கான உரையை வெளியிட்டனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நேரலையில் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது: கடந்த 2 தலைமுறைகளாக அமெரிக்கா சில நாடுகளுடன் கூட்டுறவை பேணி வருகிறது. இதை தாண்டி புதிதாக பல நாடுகளுடன் உறவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
உறவு அவசியம் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ள வலிமையின் அடிப்படையில், நாம் இணைந்து செயல்பட்டால் இந்த உலகில் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். நாம், தற்போது, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம், உள்ளிட்ட அம்சங்களில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இன்னும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அதில், சர்வதேச அளவிலான நெட்வொர்க் விரிவாக்கம் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றே இந்த மாநாட்டுக்கான பேச்சை வழங்கிவிட்டார். வீடியோவில் அவர் தான் பேசியதை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் தென்படுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்திய நிதி பேக்கேஜ்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை அளிக்கத் தொடங்கியுள்ளன. நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன, என்று தெரிவித்தார்.
பியூஷ் கோயல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட உரையில், கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான பல்வேறு வர்த்தக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் கிட்டத்தட்ட அந்த நிலையை எட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.
நிதின் கட்கரி
நிதின் கட்கரி பேசுகையில், இந்தியா உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய பொருளாதார நாடு. உள்கட்டமைப்பு வசதிகளில் அதிகப்படியான முதலீடுகள் செய்வதன் மூலமாக, மற்றும் சிறு குறு தொழில்களில் வங்கிகளில், அதிக முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க தூதர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் பேசுகையில், இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்கி வருகிறது. 21ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது சரியான வார்த்தை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்