29ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம் : அதிரடி உத்தரவை வெளியிட்ட மாநில அரசு!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருந்து வருகிறது. அங்கு இதுவரையில், 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், சுமார் 1,300 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல் 29ம் தேதி வரையில் மாநில அளவிலான முழு ஊரடங்கை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முழு ஊரடங்கு முடியும் நாளான 29ம் தேதி வரையில் கொல்கத்தாவுக்கு வந்து செல்லும் விமானங்கள் எதுவும் இயக்கப்படாது என அம்மாநில விமான நிலையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களான சென்னை, மும்பை, புனே, டெல்லி, நாக்பூர், சூரத் ஆகிய நகரங்களுடனான விமான சேவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை, 31ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.