மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை

43 Views
Editor: 0

பிரதமர் மோடி `மனதின் குரல்’ அதாவது, `மன்கிபாத்’ நிகழ்ச்சியில் மாதம்தோறும் உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் வானொலி வழியாக அவர் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.

``முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கும்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் மணிக்கணக்கில் முகக்கவசம் அணிந்து போராடும் மருத்துவர்களை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.”

பிரதமர் மோடி `மனதின் குரல்’ அதாவது, `மன்கிபாத்’ நிகழ்ச்சியில் மாதம்தோறும் உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் வானொலி வழியாக அவர் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். கொரோனா வைரஸ், பொருளாதாரம், கார்கில் போர், சுதந்திர தினம் உட்பட பல பிரச்னைகள் குறித்தும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

கொரோனா

கொரோனா

கொரோனா வைரஸ் :

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 705 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063ஆக அதிகரித்திருக்கிறது. உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாகி வருவதால் மக்களிடையே அச்சமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ``இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் மற்ற நாடுகளை விட சிறப்பாக உள்ளது. நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளது. ஆனால், வைரஸின் அச்சுறுத்தல்கள் இன்னும் முடியவில்லை. எனவே, நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே தற்போதும் மிகவும் ஆபத்தானது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதில் பல பிரச்னைகள் இருந்து வருகின்றன. பேசும்போது பலர் தங்களது முகக்கவசங்களை அகற்றி விடுகின்றனர். முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கும்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் மணிக்கணக்கில் முகக்கவசம் அணிந்து போராடும் மருத்துவர்களை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்றார். மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரம்

பொருளாதாரம் :

``நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டௌனை நீக்கும் நேரத்தில் இருக்கிறோம். இதனால், இன்னும் கவனமாக நாம் செயல்பட வேண்டும். விண்வெளி மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப நீதியில் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கொரோனாவைத் தோற்கடித்து பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி அதனை மேம்படுத்தவும் உழைக்க எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

சுதந்திர தினம் :

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி, ``கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் நடக்க உள்ளது. தொற்றுநோயில் இருந்து விடுதலை அடைவதற்கான உறுதிமொழியை இளைஞர்களும் மக்களும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தற்சார்புக்கான உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள். புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளவும் கற்பிப்பதற்குமான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நிறைவேற்றுவதிலும் தீர்மானமாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கார்கில் போர் வெற்றி தினம் :

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கிய கார்கில் போர் ஜூலை மாதம் 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் அதிகமாக இருந்தது. இந்த போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 ஆம் தேதியை `கார்கில் வெற்றி தினமாக’ ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது. அவ்வகையில் 21 வது ஆண்டை இந்தியா இன்று கொண்டாடுகிறது. மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரும் ட்விட்டரில் இதுதொடர்பாக தங்களது வாழ்த்துக்களைப் பதிவு செய்து போர் தினத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

கார்கில் போர்

கார்கில் போர்

கார்கில் தினம் குறித்து பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது, ``பாகிஸ்தானுடன் இந்தியா அந்த நேரத்தில் நல்லுறவையே விரும்பியது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் எல்லோரிடமும் பகையையே பாகிஸ்தான் வைத்து வந்தது. இத்தகைய இயல்புடையவர்கள் தங்களுக்கு நன்மை செய்ய வரும் நபர்களுக்கும் தீமை செய்யவே நினைக்கிறார்கள். இதனால்தான், இந்தியா நட்புறவை பேண முயற்சித்த போதுகூட பாகிஸ்தான் இந்தியாவை பின்னுக்குத்தள்ள முயற்சித்தது. ஆனால், இந்தியாவின் வலிமையை உலகமே பார்த்தது. நமது வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கார்கிலில் இந்தியா பெரும் பலத்தைக் காட்டியுள்ளது. அந்தப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். நம்முடைய அனைத்து செயல்களும் வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கும் விதமாக இருக்க வேண்டும். நாட்டின் நலன்களுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று கூறினார்.

உலகச்செய்திகள்