இறந்தவர்களுக்கு எதற்காக பிரேத பரிசோதனை செய்கிறார்கள்? குறிப்பாக விபத்தில் இறந்தவர்களுக்கு. பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறுப்புகளை மீண்டும் உடலினுள் வைப்பதற்கு முன்னர் ஒரு சிறு பையில் எதற்காக சேமிக்கிறார்கள்? என இது போன்ற பல கேள்விகள் பிரேத பரிசோதனை குறித்து படித்த போது எழுந்தது. இதற்கு கிடைத்த பதில்களும் புதிதாக இருந்தது.
இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யும் போது, அவர்களது உறுப்புகளை தனிதனியே பைகளில் பராமரிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அந்த பைகளில் இருந்து உறுப்புகளை மீண்டும் உடலில் பொறுத்துகின்றனர். எதற்காக இப்படி தனியே பைகளில் பராமரிக்கிறார்கள் என்றால், மீண்டும் அந்த உறுப்புகளை உடலில் பொருத்தும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கவே இந்த ஏற்பாடாம். அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சடலங்களை பிரேத பரிசோதனை செய்யும் போது, உறுப்புகள் மாறிவிடாமல் இருக்க தனிதனி குறியீட்டுடன் உறுப்புகள் பராமரிக்கப்படுகிறது.
அடுத்து இறந்தவர்களுக்கு எதற்காக பிரேத பரிசோதனை செய்கிறார்கள்? குறிப்பாக விபத்தில் இறந்தவர்களுக்கு என்றால், தலையில் அடிபடுதல், நுரையீரல் நசுங்கி காற்று உள்ளே சேருதல், இதயத்தில் அடிபடுதல் என எதனால் இறந்தார்கள் என்பதை கண்டறியவும், சில விபத்துக்கள் இயற்கை மரணம் போலவே ஜோடிக்கப்படும் அதனை கண்டறியவும் பிரேத பரிசோதனை கையாளப்படுகிறது.
இதை தவிர இறந்த நேரத்தை எப்படி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது குறித்து படித்த போது கிடைத்த தகவல்கள் வியக்க வைத்தது. அதாவது இறந்த நபரின் வெப்பநிலையானது அறையின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே போகும். அதை வைத்து மருத்துவர்கள் எப்போது இறந்திருக்க கூடும் என்பதை கணிப்பார்கள். இதை தவிர பிரேத பரிசோதனையின் போது, இரைப்பையில் உணவானது செரிமானம் அடைந்துள்ள நிலையை வைத்தும் கணிப்பார்கள்.
இதை தவிர வாயில் நுண் கிருமிகள் உருவாகி கொண்டே இருக்கும் அதனை உமிழ்நீரானது அழிக்கும் வேலையை செய்துகொண்டே இருக்கும். இறந்த பின்னர் உமிழ்நீரின் சுரப்பு குறைந்து இருக்கும். அந்த நேரத்தில் நுண்கிருமிகள் பல மடங்கு பெருகும். அதைவைத்தும் மருத்துவர்கள் இறந்த நேரத்தை கணிப்பார்கள்.
இது இல்லாமல் தசையானது இறந்த பின்னர் முழு விறைப்பு தன்மை ஏற்பட ஆறு மணிநேரம் எடுத்துக்கொள்ளும். இதுவும் இறப்பு நேரத்தை கணக்கிட உதவும். இது இல்லாமல் சில வேதியியல் முறைகள் மூலமாகவும் கண்டறிவார்கள்.