நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
2003-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நான் தொலைக்காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு விமானப் பயணம் பற்றிய நிகழ்ச்சி என்பதால் சற்று ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். உலகின் வேகமான விமானத்தின் இறுதிப் பயணம் அது. ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும் அந்த விமானத்தைப் பற்றிய குட்டிக் கதை இது.
Representational Image
Pixabay
சற்றே சிந்தித்துப் பாருங்கள். லண்டனில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு 3 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் சென்றடைவதென்றால் எவ்வாறு இருக்கும்?
இன்றைய தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய போயிங் 747 விமானம்கூட மணிக்கு 845 மைல் என்ற வேகத்தையே தொட்டு சாதனை படைத்திருக்கிறது. அதாவது, லண்டன் நகரத்திலிருந்து நியூயார்க் நகரத்துக்கு குறைந்தது 5 மணிநேர விமான பயணம்.
அப்படி என்றால், மூன்று மணி நேரங்களுக்கு குறைவாக ஒரு விமானம் சென்றது என்றால், ஆச்சர்யம்தானே? அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் இது நடந்தது 40 வருடங்களுக்கும் முன்பு.
ஆம், இந்த கான்கார்ட் விமானம் மணிக்கு 1,350 மைல் வேகத்தில், அதாவது, ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அப்படி துரிதமாக உங்களைக் கண்டம் விட்டு கண்டம் கொண்டு செல்லும் விமானத்தின் பயணத்தொகை எவ்வளவு தெரியுமா? அன்றைய காலகட்டத்தில் மற்ற விமான சேவையின் தொகையைவிட கிட்டதட்ட 30 மடங்கு அதிகம்.
எனவே, சாமானியர்கள் இதில் பயணிக்க முடியாது. மிகப் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்களும் செல்வந்தர்களுமே இந்த விமானத்தில் பயணிக்க முடிந்தது.
1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 30 மணி நேரமாக உலகையே சுற்றி சாதனை படைத்த கான்கார்ட் (Concorde) விமானத்தின் வரலாற்றை கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா?
இவ்வளவு சிறப்புமிக்க விமான சேவையை எதற்காக நிறுத்தினார்கள் என்றுதானே சிந்தனை செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இதோ அதற்கான விளக்கத்தை நானே கூறுகிறேன்.
பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டு தொழில்நுட்பத்தில் உருவான இந்த கான்கார்ட் விமானம் 1976-ம் ஆண்டு, தன் சேவையைத் தொடங்கியது. உலகிலேயே, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்த விமான சேவையை இயக்கின.
ஆனால், 20 வருடங்களுக்கு முன் (2000-ம் ஆண்டு) பாரிஸ் விமான நிலையத்தில், ஜூலை 25-ம் தேதி நடந்த ஒரு கோர விபத்து இதன் வரலாற்றையே புரட்டிப் போட்டது.
ஆம், அன்றும் வழக்கம் போலவே பாரிஸ் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது கான்கார்ட். அதன் துரதிர்ஷ்டம், சற்று முன் சென்ற ஒரு விமானத்தில் இருந்து விழுந்த ஒரு உதிரி பாகம், இதன் சக்கரத்தில் சிக்கி விமானத்தின் டயர் வெடித்தது.
இதன் காரணமாக எரிபொருள் நிரம்பியிருந்த இறக்கை கணப்பொழுதில் தீப்பிடித்து விமானமே எரிந்து அருகில் இருந்த ஒரு கிராமத்தில் விழுந்தது.
அதில் பயணித்த 109 பயணிகளும், மற்ற விமான பணியாட்களும் இறந்தனர். இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இந்தச் சம்பவம் நடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இதன் பாதுகாப்பு அம்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதை நினைவுகூரும் இந்தத் தருணத்தில் இது போன்ற விமான சேவையை இழந்துவிட்டோம் என்று கவலை கொள்பவரா நீங்கள்?
AirFrance flight crash
அப்படியென்றால் இதோ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த கான்கார்ட் விமான சேவையைத் தொடங்க பெரிதும் முயன்று வருகிறது. இந்தச் சேவையை 2022-ம் ஆண்டு முதல் தொடங்க உத்தேசித்துள்ளது. இருப்பினும், ஒலியின் வேகத்தைவிட இரு மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த விமானத்திலிருந்து எழும் ஓசை மிகவும் அதிகம். இது சமயத்தில் கண்ணாடிக் கதவுகளையும், ஏன் ஒருவரின் கேட்கும் திறனையும்கூட இழக்கச் செய்யலாம்.
எனவே, சர்வதேச அளவில் இதற்கு சில எதிர்ப்புகளும் உள்ளன. அதை எப்படி எமிரேட்ஸ் நிறுவனம் எதிர்கொள்ளப்போகிறது என்று பொறுத்திருந்து பாப்போம்.
இதை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து, இன்னும் சில வருடங்களில் இந்த விமான சேவையைத் தொடங்குமா? தொடங்கினாலும், சாமானியர்களால் இதில் பயணிக்க முடியுமா?
காலம்தான் பதில் கூற வேண்டும். காத்திருப்போம்.