அதிபர் ட்ரம்ப்: `தேர்தலைத் தள்ளி வைக்கும் ஆலோசனை!’ - வலுக்கும் எதிர்ப்புகள்:
``அமெரிக்கர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இரவே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாள்கள் அல்லது மாதங்கள் கழித்து அல்ல” - ட்ரம்ப்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஒருபுறம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா வைரஸ் பரவல், ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் இன ரீதியிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்னைகளையும் முறையாகக் கையாளாதது தொடர்பாக ட்ரம்ப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், கருத்துக் கணிப்புகளில் ட்ராம்ப் பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தேர்தல்
இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் காலத்தில் தபால் முறையில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டால் முறைகேடுகள் நடக்கும் என்றும் தவறான முடிவுகள் வரக்கூடும் என்றும் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். மேலும், ``தபால் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றால், வரலாற்றிலேயே 2020-ம் ஆண்டு தேர்தல் மிகவும் மோசமான தேர்தலாக இருக்கும். அமெரிக்காவுக்கு கவலையளிக்கும் ஒன்றாகவும் அமையும். மக்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் நிலைமை ஏற்படும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இதனால், தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் கடுமையான சலசலப்பு நிலவி வருகிறது.
பின்னர் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அதிபர் ட்ரம்ப், தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பாக எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. மாறாக, இந்தத் தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாகத் தனது கவலையைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``நான் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால், மிகவும் மோசமான தேர்தல் ஒன்றைக் காண விரும்பவில்லை” என்று கூறினார். உள்நாட்டுப் போர், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலங்கள் உட்பட 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா தேர்தல்களை நடத்தி வந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிபர் ட்ரம்ப் முன் வைத்திருக்கும் ஆலோசனைக்கு எதிராகப் பலரும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான மிட்ச் மிக்கானெல் மற்றும் கெவின் மெக்கார்த்தி ஆகியோரும் ட்ரம்ப்பின் யோசனையை நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கெவின் பேசும்போது, ``வரலாற்றில் ஒருபோதும் தேர்தலை நடத்தாமல் இருந்தது இல்லை. நாம் தேர்தலை நடத்துவதன் வழியே முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடர்பான வேலைகளை மேற்பார்வையிடும் குழுவின் தலைவர் ஜோ லோஃப்கிரெனும் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான அதிபர் ட்ரம்ப்பின் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் தேர்தல் தாமதமாகாது என்று அவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் ட்ரம்ப்
ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்தில் உண்மை இருப்பதாகவும் தபால் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முறைகேடுகள் நடைபெறும் என்றும் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவரின் கருத்தை வைத்து தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமெரிக்கர்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்த இரவே தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாள்கள் அல்லது மாதங்கள் கழித்து அல்ல” என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாகப் பதிவிட்ட ட்வீட்டில், ``நாம் 2020-ம் ஆண்டு தெர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறப்போகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.