தமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை; கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா:-
சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கொரோனா நோய் அறிகுறியுடன் இருந்த, 147 பேருக்கு, கடந்த வாரம், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள், கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு மட்டும், நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.