ஹேக் செய்யப்பட்ட பாக்., சேனல்; திரையில் இந்திய தேசியக்கொடி தோன்றியதால் பரபரப்பு:
புதுடில்லி: பாகிஸ்தான் செய்தி சேனல் ஹேக் செய்யப்பட்டு, அதன் திரையில் இந்திய தேசிய கொடியும், சுதந்திரதின வாழ்த்துகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டான் (Dawn) செய்தி சேனல், ஹேக் செய்யப்பட்டது. நேற்று (ஆக.,02) மாலை 3:38 மணியளவில் சேனலில் விளம்பரம் ஒளிப்பரப்பட்ட சமயத்தில் திடீரென இந்திய தேசிய கொடியும், சுதந்திர தின வாழ்த்து செய்தியும் திரையில் தோன்றியது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக டான் செய்தி சேனல் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛விளம்பரம் ஒளிப்பரப்பான போது திடீரென இந்தியக் கொடியும், இனிய சுதந்திர தினத்தின் வாழ்த்தும் திரையில் தோன்றியது. சிறிது நேரம் அப்படியே இருந்து பின்னர் அது மறைந்தது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இறுதி முடிவுக்கு வந்தவுடன் அதன் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும்,' எனக் கூறியுள்ளது.