அயோத்தி,
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி:
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவிற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் உள்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அயோத்தி வந்த பிரதமர் மோடியை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். சகேத் கல்லூரியில் உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் மூலமாக வந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலம், விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார்.