சீனாவுடன் தொடர்புடைய 2,500 யூ-டியூப் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம் – கூகுள் நிறுவனம் நடவடிக்கை :
இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் இறையாண்மைக்கும், தனிநபர் தகவல் பாதுகாப்புக்கும் எதிராக உள்ளதாக கூறி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 106 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தடை விதிக்கப்பட்டுள்ள இந்த செயலிகள் பிளே ஸ்டோர், ஐ.ஓ.எஸ். பதிவிறக்கம் தளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டன. மேலும் 250 செயலிகளுக்கு தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சீன செயலிகளுக்கான மாற்று செயலிகள் தயாரிப்பில் இந்திய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
சீன செயலிகளுக்கு அமெரிக்கா, இந்தோனேஷியா, மத்திய கிழக்கு நாடுகள் பல ஏற்கெனவே தடை விதித்துவிட்டன. இதேபோல், சீனாவும் அமெரிக்காவின் ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர், விக்கிபீடியா போன்றவற்றை பயன்படுத்த அனுமதிப்பதில்லை.
இந்தநிலையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் யூ-டியூப் வலைத்தளத்தில், சீனாவுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 2,500 வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
தேவையற்ற செய்திகள் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்களை வெளியிட்டது தொடர்பாக அவைகள் நீக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.