''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! : நீக்க வலுக்கிறது கோரிக்கை

46 Views
Editor: 0

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்..

''இ - பாஸ்'' அரசாக மாறியுள்ள இ.பி.எஸ்., அரசு! : நீக்க வலுக்கிறது கோரிக்கை :

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் மாரடைப்பால் கடந்த மாதத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய மாரடைப்புக்குக் காரணம், இ.பாஸ்.

ஐந்து நாட்களுக்கு முன்பு, அவருடைய தாயாரின் மரணத்துக்குப் போவதற்கு, உடனடியாக அவருக்கு இ---பாஸ் கிடைக்கவில்லை. அதை நினைத்து நினைத்தே மனம் புழுங்கிய அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். சென்னையில் இருக்கும் ஒரு இளைஞரின் தாயார், விருதுநகரில் இறந்துவிட்டார். இ-பாஸ் கிடைக்கவில்லை. தாயின் முகத்தை இறுதியாகப் பார்க்கும் வெறியில் கிளம்பி வந்துவிட்டார். அவரைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள். இரவு 2 மணிக்கு நண்பர்களும் உறவினர்களும் சென்று, தாயார் இறந்தது உண்மையென்று விளக்கி அழைத்து வந்துள்ளனர்.

latest tamil news

கோவையில் மகள் வீட்டுக்கு வந்த அந்த ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு வயது 84. குடியிருப்பது மகன் குடும்பத்துடன் சிவகாசியில். சிகிச்சை பெறுவதும் அங்குள்ள டாக்டர்களிடம்தான். அங்கே போவதற்காக ஐந்து முறை இ-பாஸ்க்கு விண்ணப்பித்துவிட்டார். மருத்துவச் சான்றுகள் அனைத்தையும் இணைத்தும் இதுவரை கிடைக்கவில்லை.

இறப்பு, திருமணம், சிகிச்சை மற்றும் சொந்த ஊருக்குத் திரும்புதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமே, இ-பாஸ் அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர் அதிகாரிகள். ஆனால், இதற்காக விண்ணப்பித்தாலும் உரிய ஆவணங்கள் இல்லையென்று மறுப்பதே அதிகமாக நடக்கிறது.அதேநேரத்தில், ஒரு சில பிரவுசிங் சென்டர்களில் கேட்கும் பணத்தைத் தந்தால் உடனே இ-பாஸ் கிடைத்து விடுகிறது. இ-பாஸ் கொடுப்பதில் அதீதமாக முறைகேடும் ஊழலும் நடக்கிறது என்பதால், இதை கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது, மறுக்கத்தக்க விஷயமில்லை. அதனால்தான், அவருடைய கருத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கு இ.பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்பதற்காக, இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுகளிடம் ஒப்படைத்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் என்ற நடைமுறையே இல்லை. அந்த மாநிலங்களில் கொரோனா பரவுவது நம் மாநிலத்தை விட குறைவாகவே உள்ளது.

இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்குமே அனுமதிக்க வேண்டும்; அல்லது இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடுமையாக தண்டிக்கலாம்!தற்போதுள்ள சூழ்நிலையில், அனாவசியமாக இ-பாஸ் எடுத்து, வெளியூர்களுக்கு சென்று, 'ரிஸ்க்' எடுப்பதற்குமக்கள் யாரும் தயாராகயில்லை என்பதுதான் உண்மை. இ-பாஸ் நடைமுறையை எடுத்துவிட்டால், சுற்றுலா மையங்களிலும், சுப, துக்க காரியங்களிலும் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகமாகும் என்பதுதான் அரசின் அச்சம். அவ்வாறு அரசு அனுமதித்த எண்ணிக்கைக்குக் கூடுதலாக எங்காவது யாராவது கூடினால், அவர்களின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். - நமது சிறப்பு நிருபர் -

 

 

உலகச்செய்திகள்