இன்று (ஆக.7) புதிய கல்வி கொள்கை மாநாடு : பிரதமர் மோடி உரை :
புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி கொள்கைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில், 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த புதிய கல்வி கொள்கையில், உயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சிக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலை மானிய குழு ஆகியவை இன்று ஏற்பாடு செய்து உள்ளன.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்க உரையாற்ற உள்ளார். அப்போது, புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவம் குறித்து, மோடி விளக்க உள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.