திருவாரூர்:
ஆன்லைன் கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர், நன்னிலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தமிழக அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தும் முறையை கொண்டு வந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வி்யை பாதிக்கும் ஆன்லைன் கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கு தேவையான இணைதள வசதியை ஏற்படுத்தி கொடுத்த பிறகு வகுப்பை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் திரு.வி.க. கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜ், நகர தலைவர் சுர்ஜித், கல்லூரி கிளை செயலாளர் மணி, நிர்வாகி ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆன்லைன் கல்வி முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் இந்திய மாணவர் சங்கத்தினர் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் தீபன் ராஜ், மாவட்ட துணை தலைவர் பாலா, கல்லூரி செயலாளர் கில்லிவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.