patta: பட்டா எப்படி பெறுவது, அதற்கான வழிமுறை என்ன? அரசு அலுவலகத்தில் அலைச்சல் இல்லாமல் வேலை ஆகணுமா?
இரண்டு மூன்று முறை தாசில்தார் அலுவலகம் சென்று வந்தாலே போதுங்க, எல்லாமே தெரிந்துகொள்வோம். இதற்கான தனி அறிவுரை அவசியமா என்றால் அவசியம் தான். இப்போது தான் எல்லாம் இணைய வழி, ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் முதலில் VAO வை பார்க்க வேண்டும். பின்னர் RI. இறுதியாக தாசில்தார். இவர்களுக்கு முன்னர் தண்டல்காரர். இவர் பார்த்து நமது கோப்பை முன் நகர்த்தினால் மட்டுமே, VAO நம்மை கடைக்கண்ணால் பார்ப்பார். அப்படி இப்படியென ஒரு வழியாக தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ஏதாவது சான்றிதழ் பெற்று வருவதற்குள் பெரிய சாதனை புரிந்த திருப்தி வந்துவிடும்.
ஆனால் இன்று எல்லாம் இணையவழி என்பதால், மேற்கண்ட நிகழ்வுகள் நடப்பதில்லை என நினைக்க வேண்டாம். ஆன்லைனில் ஏதாவது ஒரு சான்றிதழிற்கு அப்ளை செய்துவிட்டு, உடனடியாக வேலை நடக்க வேண்டும் என்றால் பழையபடி நேரில் சென்றுதான் காரியத்தை சாதித்து கொள்ளவேண்டும்.
அரசு வழங்கும் சான்றிதழ்களில் பட்டா வாங்குவது பற்றி தான் மக்களுக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருக்கும். பட்டா வாங்க இணையத்தில் விண்ணப்பித்தாலும் சரி அல்லது நேரிடையாக அலுவலகத்திலே போய் விண்ணப்பித்தாலும் சரி. அதை மறந்துவிட்டோம் இதை மறந்துவிட்டோம் என அலையாமல் முன்னரே என்னென்ன சான்றிதழ்கள் கொண்டு செல்ல வேண்டும், எப்படி எளிதாக பட்டா வாங்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நிலத்தை வாங்கும் போது பத்திர பதிவு செய்வது போல பட்டாவும் வாங்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்று. நீங்க வாங்கிய இடம் எந்த தாலுக்கா எல்லைக்குள் வருகிறது என்பதை பார்த்து அந்த குறிப்பிட்ட தாலுகாவில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதோடு சம்பந்தப்பட்ட சொத்தை உரிமையாளர் அனுபவித்து வருகிறார் என்பதற்கு ஆதாரமாக, சொத்து வரி ரசீது, மின்கட்டண ரசீது அல்லது அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை இவற்றையெல்லாம் கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். இவற்றின் பயன்பாடு கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். திடீரென அதிகாரிகள் அதை கொண்டுவா இதை கொண்டுவா என அலைக்கழிப்பார்கள்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தேவையானவை, விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார் பெயர், முகவரி, பதிவு கோரும் இடத்தின் வட்டம், மாவட்டம், கிராமத்தின் பெயர், பதிவு எண், நகர அளவை எண், மனை பிரிவு எண், தெருவின் பெயர், மனை அங்கீகரிக்கப்பட்டதா? இல்லையா என்பதற்கான விளக்கம், மனைப்பிரிவு வரைபடம், எந்த வகையில் சொத்து விண்ணப்பதாரருக்கு கிடைக்கப்பெற்றது போன்ற எல்லாவற்றையும் தெளிவாக நிரப்பி கொடுக்க வேண்டும்.
விண்ணப்பத்தோடு கேட்கப்பட்ட சான்றிதழ்களை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னர் அவர்கள் கொடுக்கும் ஒப்புதல் சீட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறிய காலத்திற்குள் பட்டா கைக்கு வரவில்லை எனில் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகலாம்.