இ-பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.. மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி!!
சென்னை : மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மாநில மனித உரிமை மீறலாகாதா என்று தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் 4 வாரங்களில் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இ - பாஸ் கிடைப்பதில்லை என்றும் அதே சமயம்,சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ - பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால், இ - பாஸ் நடைமுறை தொடரும் என்று அண்மையில் முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'கடந்த 4 மாதங்களாக இ - பாஸ் நடைமுறை அமலில் இருப்பதால் மருத்துவ சேவைகள், கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரை பரிசீலித்த மாநில மனித உரிமை ஆணையம், தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இ- பாஸ் நடைமுறை தொடர்வது என்பது மனித உரிமைகளுக்கு மீறலாகாதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும், இ பாஸ் நடைமுறை எதற்காக தொடரப்படுகிறது என்பதற்கும் நான்கு வார காலத்துக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.